தீவிர ரோந்து நடவடிக்கையில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர்
இலங்கையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டிருந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி மற்றும் தீவுப்பகுதிகளில் தீவிர ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து ஏராளமான மக்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ளனர்.
மேலும் இலங்கையில் நடைபெற்ற வன்முறையைப் பயன்படுத்தி அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் சுமார் 50 பேர் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் அகதிகள் போல் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்க தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடற் பகுதிகளிலும் அதேபோல் தீவு பகுதி முழுவதும் தமிழக கடலோர பாதுகாப்பு படையின் ராமநாதபுரம் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ராமேஸ்வரம் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட தமிழக கடலோர பாதுகாப்பு படை காவலர்கள் ரோந்து படகுகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை ஆகியோருக்கு சொந்தமான ரோந்து படகுகள், ஆள் இல்லா விமானங்கள், ஹெலிகொப்டர்கள் சர்வதேச கடல் எல்லையில் இருந்து இந்திய கடல் பரப்பு, மணல் திட்டுகளில் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் கடல் பகுதியில் உள்ள முயல் தீவு, குருசடைத் தீவு போன்ற தீவுப் பகுதிகளில் தப்பி வருபவர்கள் மறைந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த தீவு பகுதிகளில் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
