தமிழ்நாட்டில் விசா காலாவதியான இலங்கையர்களை வெளியேறுமாறு கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மற்றும் விசா காலாவதியானவர்கள், 2025 மே 10 ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் எத்தனை பேருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை குறித்த ஊடகம் வெளியிடவில்லை.
இலங்கை தமிழர்கள்
இதனையடுத்து குறித்த விடயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் தலையீட்டைக் கோரி மனு ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களால் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இந்த மனுவில், 1990 மற்றும் 2011 க்கு இடையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் முகாமில் தாம் தங்கியிருந்ததாக, குறித்த இலங்கைத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த உடனேயே, தங்கள் நாட்டிற்குத் திரும்பியபோதும், அங்குள்ள நிலைமைகள் சாதகமாக இல்லாததால், தாம் இலங்கை கடவுச்சீட்டுக்கள் மற்றும் இந்திய விசாவைப் பெற்று தமிழ்நாட்டிற்கு வந்து, இங்கு வசித்து வசிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முதல்வருக்கு கடிதம்
எனினும் தங்களின் விசா காலாவதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம் தங்களில் பலர் இந்திய வம்சாவளி தமிழர்களாவர் என்றும், எனவே இந்தியாவில் வாழும் வகையில் இந்திய குடியுரிமை பெற விரும்புவதாகவும், முதல்வருக்கான கடிதத்தில் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் 2025 மே 4 ஆம் திகதி, குறித்த இலங்கையர்களின் விசா செல்லுபடியாகும் காலம் காலாவதியாகிவிட்டதால், மே 10 ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்தே, தமிழக முதல்வர் இந்த விடயத்தில் தலையிட்டு தங்;களை முகாம்களில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை தமிழர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன் குறித்த இலங்கைத் தமிழர்கள் நேற்று திங்களன்று நாமக்கல் ஆட்சியரிடம் இது தொடர்பாக ஒரு மனுவையும் கையளித்துள்ளனர்.