தமிழ், முஸ்லிம் கட்சிகள் ரணிலை ஆதரிக்க வேண்டும்: மூன்று பங்காளி கட்சிகளின் கூட்டு அறிவிப்பு
கோட்டாபயவால் நாசம் ஆக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டி எழுப்பி மக்களின் வாழ்க்கையை மீட்டு தர தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே முடியும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் செய்திருந்த தமிழ் பேசும் மூன்று பங்காளி கட்சிகளான இலங்கை மக்கள் தேசிய கட்சி, ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி கூட்டாக அறிவித்துள்ளன.
ஸ்ரீ கொத்தவில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என். விஷ்ணுகாந்தன் தெரிவித்ததாவது,
ரணிலை இடைக்கால ஜனாதிபதியாக்க வேண்டும்
"கோட்டாபய ராஜபக்ச மக்களை ஏமாற்றி, நாட்டை நாசமாக்கி சென்று உள்ளார். மாபெரும் அரசியல் பிரளயம் இடம்பெற்று முடிந்து உள்ளது. இந்த நிலையில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்று சரியாக நாட்டையும், மக்களையும் வழி நடத்தி கொண்டிருப்பவர் ரணில் விக்கிரமசிங்கவேதான்.

எல்லோருக்கும் பதவி ஆசை இருக்கின்றது, ஆனால் பிரதமர் பதவியை பொறுப்பெடுக்க மற்ற எல்லோரும் அஞ்சிய நேரத்தில் பிரதமர் பதவியை பொறுப்பெடுத்தவரும் ரணில் விக்கிரமசிங்கவே.
இவர் இடைக்கால ஜனாதிபதியாக வருகின்ற பட்சத்தில் நிச்சயமாக ஒரு மீட்பராக தொடர்ந்தும் ஒளிர்வார் என்பதில் மாற்றம் கிடையாது. தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ரணிலை ஆதரித்து அவரை இடைக்கால ஜனாதிபதி ஆக்க வேண்டும்," என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் மௌலவி தலைவர் முபாரக் அப்துல் மஜித் தெரிவித்ததாவது,
ஹக்கீமுக்கும், சஜித்துக்கும் இடையிலான இரகசிய டீல்
"2005, 2010, 2015 கால பகுதியில் மு. கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ரணில் நல்லவராக தெரிந்தார், அவர் காட்டிய வழியில் ஹக்கீம் நடந்துள்ளார். ஆனால், இப்போது சஜித்துடன் நிற்கின்றார்.
எனவே, ஹக்கீமுக்கும், சஜித்துக்கும் இடையில் இரகசிய டீல் ஒன்று இருப்பது தெரிகின்றது.

மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் ஜனாதிபதியாவது ஜனநாயகம் இல்லை என்றால் ஏன் 69 லட்சம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவரை மக்கள் விரட்ட வேண்டும்? சஜித் கூட ஜனாதிபதி தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்தான்.
அனுரகுமார திஸ்ஸாநாயக்கவும் ஜனாதிபதி தேர்தலில் மிக மோசமாக நிராகரிக்கப்பட்டவதான். அவர் போட்டியிடுவது ஜனநாயகம் இல்லை என கூற முடியுமா? எத்தனை வாக்குகள் ஆயினும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக உரிமை உண்டு.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திறமையற்றவராக இருந்தால் கொஞ்சப்பேர் வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினரான, திறமையான ஒருவரை ஜனாதிபதியாக்குவதில் என்ன பிரச்சினை? 69 லட்சத்தை விட ஒரு லட்சம் பேரால் தெரிவு செய்யப்பட்டவரை வைத்தாவது நாட்டை கட்டியெழுப்புவதே இன்றைய தேவை," என தெரிவித்துள்ளார்.