அன்னதானத்தோடு புத்தாண்டை வரவேற்ற முள்ளியவளை சந்தியம்மன் கோவில் பக்தர்கள்
முள்ளிவளையில் உள்ள சந்தியம்மன் கோவிலில் பக்கதர்களால் அன்னதானம் வழங்கப்பட்டு புத்தாண்டான 2024 ஆம் ஆண்டு வரவேற்கப்பட்டது. ஏழு வருடங்களாக தொடர்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி புத்தாண்டினை வரவேற்பதாக ஏற்பாட்டாளர்கள் எடுத்துரைத்திருந்தனர்.
முள்ளியவளை வர்த்தகர்களும் வாகன உரிமையாளர்களும் அன்னதான நிகழ்வை ஏற்பாடு செய்யததோடு நலன் விரும்பி பங்காளர்களையும் உள்ளீர்த்து பயணிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஏழு வருடங்களாக நடைபெறும் அன்னதான நிகழ்வு
முள்ளியவளையினூடாக செல்லும் மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் வற்றாப்பளைக்கு திரும்பும் சந்தியில் உள்ள அம்மன் ஆலயமே பக்தர்களால் சந்தியம்மன் கோவில் என அழைக்கப்படுகின்றது. இந்த ஆலயம் ஆதியானது என்று எடுத்துரைக்கும் ஆலயம் சார்ந்த பெரியவர் 1992 ஆம் ஆண்டுக்கு பின்னரே இது பிரசித்திபெற்ற ஆலயமாக மாறியது என்றும் சொன்னார்.
வற்றாப்பளையில் இருந்து முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கான வழித்தடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்தியம்மன் ஆலயச் சூழலில் மாங்குளம் முல்லைத்தீவு வீதியானது வற்றாப்பளைக்குச் செல்லும் வற்றாப்பளை வீதி,நாவல்காட்டுக்குச் செல்லும் நாவலர் வீதி,காட்டாவிநாயகர் ஆலயத்திற்கு செல்லும் இடைவீதி என்பன சந்திக்கும் சந்திப்புக்களை கொண்டுள்ளது.
கட்டடப் பொருள் விற்பனை நிலையம்,பாண் வெதுப்பகம்,அம்மன் முன்பள்ளி,சற்றுத் தொலைவில் முள்ளியவளைச் சந்தை என பல நுகர்வு நிலையங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நித்தம் வந்து சித்தம் பெற்றிட வணங்கிடும் தாய் எங்களின் விருப்பக் கடவுள் என அவர்கள் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.
ஏழு வருடங்களாக நிதியினை தமக்குள் சேகரித்து குழைசாதம் செய்து அன்னதானமாக வழங்கப்பட்டு வருகிறது.வர்த்தகர்களும், ஆட்டோ வாகன உரிமையாளர்களும் இணைந்து தன்னார்வமாக முன் வரும் நலன் விரும்பிகளையும் இணைத்து புத்தாண்டினை அன்னதானம் கொடுத்து வரவேற்கின்றோம். இந்த முயற்சிகளை தொடர்ந்து செய்து கொள்ளவே விரும்புகின்றோம் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
அமைப்புகளற்ற அமைப்புச் செயற்பாடுகள்
சந்தியம்மன் ஆலயத்தில் புத்தாண்டினை வரவேற்கும் பக்தர்கள் தமக்குள் எந்தவொரு அமைப்புக்களையும் பேணிக் கொள்ளாத போதும் அமைப்பொன்றின் செயற்பாடுகளை போல் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது ஆச்சரியமானதாக இருக்கின்றது என சமூக விடய ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
சமூக செயற்பாடுகளை அவற்றின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு மாற்றங்களை ஆய்வு செய்வதில் ஈடுபடுபவர்களை சமூக விடய ஆய்வாளர்கள் என குறிப்பிடப்படுவதைச் சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.
சந்தியம்மன் ஆலயத்தில் மேற்கொள்ளப்படும் அன்னதான நிகழ்வுக்கான நிதி சேகரிப்பும் அந்த நிதியை அவர்கள் திட்டமிடும் முறையும் உற்று நோக்க வேண்டிய விடயமாகும்.
அன்னதான செயற்பாடுகளுக்காக மேற்கொள்ளப்படும் செலவுகளுக்கான பதிவுகளையும் ஈட்டப்பட்ட நிதிக்கான பதிவுகளையும் அவர்கள் ஒப்பு நோக்கி செயற்படுகின்றனர். மீதமாகும் நிதியினைக் கொண்டு ஆலயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி அவற்றைப் பேணிப் பாதுகாப்பதிலும் அதிகூடிய கவனமெடுக்கின்றனர். அருகிலுள்ள ஆலயங்களுக்கிடையே பொருட்களை பரிமாறிக் கொள்வது மட்டும் அனுமதிக்கப்படுவதனையும் அவர்களுடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
இந்த விடயங்களை சுட்டிக்காட்டி சமூக விடய ஆய்வாளர் ஒருவரோடு பேசும் போது அவர் அவர்களிடம் இருக்கும் அமைப்பற்ற அமைப்புச் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி இந்த இயல்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும் என எடுத்துரைத்திருந்தார்.
பரிபாலன சபைகளினூடாக அன்னதான செயற்பாடுகள் ஏன் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற வினவலுக்கு குழப்பங்களை தவிர்த்துக் கொள்வதற்காக அதனை விரும்பவில்லை என அன்தானத்திற்கான உணவுகளை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர் குறிப்பிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்தியம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகம்
1992 ஆம் ஆண்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகப் பொங்கல் நடைபெற்றிருந்தது. அதிகளவான பக்தர்கள் கூடியிருந்தனர். பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த பொங்கல் நிகழ்வில் பக்தர்கள் மீது முல்லைத்தீவு நகரில் இருந்த இராணுவ முகாமில் இருந்து ஏவப்பட்ட எறிகணைகளில் இருபத்தியிரண்டு பேர் கொல்லப்பட்டிருந்ததோடு ஆறு பேர் காயமடைந்திருந்தனர். அன்றைய நிகழ்வினால் ஒருவருடம் பூட்டப்பட்டிருந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் அடுத்த ஆண்டில் மீண்டும் திறக்கப்பட்டது.
வழமைபோல் ஆலயத்தில் பூசைக்கள் நடைபெற்ற போதும் பக்தர்கள் இயல்பாக வழிபடுவதற்கு வரவில்லை என வற்றாப்பளை ஆலயத்தின் சார்பில் பேசியவர் குறிப்பிட்டிருந்தார். பூட்டப்பட்டிருந்த ஒரு வருட காலத்தில் வைகாசி விசாகப் பொங்கல் முள்ளியவளையில் உள்ள சந்தியம்மன் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கண்ணகியம்மன் பக்தர்கள் சந்தியம்மன் ஆலயத்தில் தங்கள் நேத்திகளை நிறைவேற்றி தாயவளை வணங்கிக் கொண்டனர் என அன்றைய பொங்கல் நிகழ்வில் பங்கெடுத்து தன் நேத்திகளை செய்திருந்த ஒருவர் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
வைகாசி விசாகப் பொங்கலில் பறிபோன 22 தமிழர்களின் உயிர்கள்
முல்லைத்தீவு நகரில் இருந்த சிங்கள இராணுவத்தினரால் 1992 ஆம் ஆண்டில் வைகாசி விசாகப் பொங்கல் நிகழ்வில் பங்கெடுத்திருந்த பக்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களால் கொல்லப்பட்ட 22 தமிழர்களையும் நினைவு கொண்டு வருடந்தோறும் ஏன் அஞ்சலிப்பதில்லை என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் அன்று இறந்த தமிழர்களை நினைவு கொள்ளும் வகையில் அவர்களுக்காக ஒரு நினைவிடம் கூட இல்லாமை ஏன் எனவும் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற எறிகணைத் தாக்குதல் தொடர்பில் தகவல்களை உறுதிசெய்ய மேற்கொண்ட கருத்தாடல்களிற்குட்பட்ட மக்கள் பலர் தங்கள் ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.