பிரித்தானியாவில் உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி! பெற்றோர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் சிறுமி இஷா கொடுமையான இரத்தப்புற்று நோய்க்குள்ளாகியிருந்த நிலையில், "தண்டு உயிரணுத் தானம்" செய்ய கொடையாளர்களிடம் பெற்றோர்களால் உதவிக்கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில்,தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளதாகவும், ஈஷாவுக்கு ஸ்டெம் செல் தானம் செய்யும் ஒருவர் நேற்று கிடைத்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நான்கு வயது நிரம்பிய பிரித்தானியா வாழ் சிறுமி இஷா, கொடுமையான இரத்தப்புற்று நோய்க்கு (Acute Myeloid Leukaemia) உள்ளாகி கடந்த 15 வாரங்களாக Great Ormond Street சிறுவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிறுமியைத் தாக்கியுள்ள நோயில் மாற்றம் ஏற்படவில்லை என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
2 தடவை நடைபெற்ற வேதிச்சிகிச்சை (Chemotherapy) பயனளிக்காத நிலையில், 4 வயது நிரம்பிய இச்சிறுமியைத் தாக்கியுள்ள கொடுமையான இரத்தப்புற்று நோய்க்கு "தண்டு உயிரணுத் தானம்" (Stem Cell Donation ) மூலமே சுகமாக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால், அவளது உடலுக்குப் பொருத்தமான ஒருவர் ஸ்டெம் செல் தானம் வழங்க வேண்டும், அதுவும் மூன்று வாரங்களுக்குள் பிரித்தானிய மருத்துவமனைகளில் தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்தவர் ஸ்டெம் செல் தானம் வழங்க பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,ஈஷா இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவள் என்பதால், அவளுக்கு ஒரு தெற்காசியரின் ஸ்டெம் செல்கள் தான் பொருந்தும். அதிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டு. தானம் செய்ய ஒருவர் முன்வர வேண்டும், அவரது ஸ்டெம் செல்கள் ஈஷாவுக்கு பொருந்த வேண்டும்.தானம் செய்பவர் ஆய்வக சோதனைகள் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளதாகவும், ஈஷாவுக்கு ஸ்டெம் செல் தானம் செய்யும் ஒருவர் நேற்று கிடைத்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தை நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனவும், குழந்தைக்காக அனைவரும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.