திராணியற்றவர்களே பொது வேட்பாளர் தொடர்பில் அங்கலாய்க்கின்றனர் : சிறீரங்கேஸ்வரன்
ஜனநாயகத்தில் மக்களை தனித்தனியாக சந்திக்க திராணியற்றவர்களே பொது வேட்பாளர் தொடர்பில் அங்கலாய்க்கின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் (15.05.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர்களால் பொது வேட்பாளர் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்தரனை போட்டியிடுமாறு தான் கோரினேன் என்று அவர் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என ஈ.பி.ஆர் எல் எவ் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் அவசரப்பட வேண்டாம் எனவும் எவ்வாறாயினும் தென்னிலங்கையை சார்ந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவரே ஜனாதிபதியாக வருவார்.
ஆயினும் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது கருத்துக்கள் நிலைப்பாடுகள் என தமது விஞ்ஞாபனங்களை வெளியிட்டபின்னரே இது தொடர்பில் சிந்திக்கலாம் என கூறியுள்ளார்.
இவ்வாறான சூழலில் பொது வேட்பாளர் தொடர்பில் ஒரு நிலையான முடிவை அக்கட்சி முன்னெடுக்கவில்லை என்பது புலனாகின்றது. இச்சந்தர்ப்பத்தில்தான் சுரேஸ் பிரேமச்சந்திரன் தன்னிடம் ஒருதடவை கேட்டிருந்தார் தமிழ் பொது வேட்பாளருக்கு பொருத்தமானவர் நீங்கள்தான் என்றும் ஒரு சிலரால் இது குறித்து பகிரப்பட்டது எனவும் அது குறித்து எனது நிலைப்பாடு என்ன என்றும் சுரேஸ் என்னிடம் கேட்டிருந்தார்.
தென்னிலங்கை அரசியல்
நான் அப்போதே எனது நிலைப்பாட்டை கூறியிருந்தேன் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. முன்பதாக சரத் பொன்சேகா, மைத்திரி, சஜித் என எவ்வித நிலைப்பாடும் இல்லாது தத்தமது சுயநலன்களுக்காக ஆதரவளித்தவர்கள் எல்லாம் இப்பொழுது சஜித் பிரேமதாசவின் தூண்டுதலிலே இவ்வாறு பொது வேட்பாளர் தொடர்பில் பேசப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இதில் பார்க்க வேண்டிய விடயம் என்னவெனில் மக்களை ஜனநாயகத்தில் தனித்தனியே சந்திக்க திராணியற்றவர்கள் இவ்வாறான சந்தர்ப்பவாத கூட்டுக்களை உருவாக்குவதும் தென்னிலங்கை அரசியல் சில தலைமைகளுக்காக வாக்குகளை சிதறடிக்கும் நோக்குடன் செயற்படுவதும் தரகு வேலைகளில் ஈடுபடுவதும் வாடிக்கையாகவே உள்ளது.
உண்மையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது அரசியல் நிலைப்பாட்டினை மக்களிடையே வெளிப்படையாக முன்வைத்தே பயணிக்கின்றது. தேர்தலையும் தனியாகவே நின்று எதிர்கொள்கின்றது.
ஆனால் சந்தர்ப்பவாத சரணாகதி கூட்டில் இருப்பவர்களால் அடுத்துவரும் பொதுத் தேர்தலில் மக்களை தனித்தனியே சந்தித்து தமது செல்வாக்குகளை நிரூபிக்க கட்டுவார்களா என்றும் அவர் சவால் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |