தமிழீழ மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே அமைக்க வேண்டும் - வி.உருத்திரகுமாரன்
தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே வடிவமைத்து, இந்த அரங்கை நோக்கி அனைத்துலக சமூகத்தை இழுக்க வேண்டும் என தனது புத்தாண்டுச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது புத்தாண்டு செய்தியின் முழுமையான வடிவம்,
மலர்ந்துள்ள புதிய ஆண்டு தமிழீழத் தேச மக்களுக்கும், தமிழக மற்றும் உலகத்தமிழ் மக்களுக்கும் நல்லாண்டாக அமைய வேண்டும் என வாழ்த்துவதோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது அன்பினையும் வெளிப்படுத்திக் கொள்வதில் நான் பேருமையடைகிறேன்.
உலகளாவிய ரீதியில் மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கோவிட் பெருந்தொற்றினை எமது மக்கள் தடுப்பூசியினைப் பெறுவதன் மூலமும், சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் மிக அவதானமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலையும் இத் தருணத்தில் உங்களிடையே முன்வைக்க விரும்புகின்றேன்.
இப் பெருந்தொற்றை வெற்றி கொள்வதற்கு மனிதகுலம் தனது சக்தியையெல்லாம் திரட்டிப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இப் புதிய ஆண்டு மலர்கிறது.
2021 ஆம் ஆண்டின்போது கோவிட் வைரஸ் கிருமிக்கெதிரான தடுப்பூசி பரவலாக உபயோகத்துக்கு கொண்டு வரப்பட்டதனால் அதுவே பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. இது எமக்கெல்லாம் பெரு நம்பிக்கை தருவதாக இருக்கிறது.
இருப்பினும், உலக நாடுகள் அனைத்திலும் தடுப்பூசி கைக்கெட்டியது சமத்துவமான முறையில் அமையவில்லை என்பதும் பொருளாதார வளம் குறைந்த நாடுகள் பலவற்றிடையே தடுப்பூசி குறைந்த வீதமான மக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்பதும் கசப்பான உண்மைகள். உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற மக்களிடையே தடுப்பூசி பயன்பாட்டில் நம்பிக்கையற்ற ஒரு பகுதியினர் தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டி வருகின்றமையும் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு சவாலாக அமைந்திருக்கிறது.
உலக நாடுகள் அனைத்திலும் கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் சீரான முறையில், சமத்துவமாக அமையும்போதுதான் இத் தொற்றைக் கட்டுப்படுத்துவது சாத்தியப்படும் என்ற புரிந்துணர்வோடு உலகத் தலைவர்கள் 2022 ஆம் ஆண்டில் நடந்து கொள்ள வேண்டும் என்ற செய்தியினையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் இத் தருணத்தில் வெளிப்படுத்த விரும்புகின்றேன்.
கடந்து சென்ற ஆண்டின் போது தமிழீழ தேசியப்பிரச்சனை மேலும் கூர்மையடையாவிடினும் அது அனைத்துலகப்பரிமாணம் கொண்டதோர் பிரச்சனையாக நீடித்து வருகிறது. இதற்குப் புலம் பெயர் தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் செயற்பாடுகளும் பங்களிப்புச் செய்திருக்கின்றன.
தாயகத்திலும் தமிழ் மக்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தமது சுதந்திர உணர்வை வெளிப்படுத்தி வருகிறார்கள். 2021 இல் நிகழ்த்தப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எனும் போராட்டம் எமது மக்கள் தமது சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தியதற்கு நல்லதோர் உதாரணமாக அமைந்திருந்தது.
2021 ஆம் ஆண்டில் தாயகத் தமிழ்த் தலைவர்கள் 13 ஆம் திருத்தச்சட்டத்தைச் சுற்றித் தமது அரசியலைச் செய்து கொண்டிருந்தமையினை அவதானிக்க முடிந்தது.
தமிழீழத் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக 13 ஆம் திருத்தச் சட்டம் அமையாது எனவும், எனினும் நடைமுறையில் இருக்கும் 13 ஆம் திருத்தத்தின் கீழ் அமைந்த மாகாண சபைகளை இல்லாதொழிக்கும் முயற்சியை இலங்கை அரசு எடுக்குமானால் அதனை எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பல தாயகத் தமிழ் அரசியல் தலைவர்கள் கொண்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
ஆனால், இந்த அரசியல் கதையாடல் நடைபெறும் முறையானது குறிப்பிட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த மாகாண சபைகள் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முடிச்சுப்போடும் முயற்சிக்குத் துணைபோவதாக அமைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுவதனைத் தவிர்க்க முடியவில்லை.
இதனால், 2022 ஆம் ஆண்டின்போது இவ் விடயத்தை அணுகுவதற்குத் துணை செய்யும் வகையில் தமிழர் தேசத்தின் சார்பில் சில கருத்துக்களை இவ் வருட புதுவருடச் செய்தியில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஏற்கெனவே உள்ளூராட்சி மட்டத்தில் மாநகர சபைகள் இருப்பதுபோல், நகராட்சி மன்றங்கள் இருப்பதுபோல், கிராமசபைகள் இருப்பதுபோல் நாடு தழுவியரீதியில் அமைந்த அதிகாரப்பரவலாக்கலின் ஓரம்சமாக மாகாண சபைகள் இருப்பது வேறு. ஆனால் தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாண சபைகள் அமையும் என நம்புவதோ அல்லது பேசுவதோ வேறு.
மேலும் 13ம் திருத்தச் சட்டம் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் ஒரே அலகாக இருக்க வேண்டுமென உறுதி செய்யவில்லை.
தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைவதில் மாகாண சபைகள் ஏற்கனவே தோல்வி கண்டு விட்டன. மாகாண சபைகளைச் செத்த பிணம் என்று தாயகத் தமிழ்த் தலைவர் ஒருவர் வர்ணித்ததுமுண்டு.
மாகாண சபைகளை தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுடன் எவரும் முடிச்சுப் போடுவதைத் தாயகத் தமிழ்த் தலைவர்கள் நிராகரிக்க வேண்டும்.
இந்திய அரசுடன் உரையாடும்போது மாகாண சபைகளை தோல்வியடைய வைத்ததில் சிங்கள இனவாதத்தினதும், பேரினவாதமயப்படுத்தப்பட்ட இலங்கை அரசினதும் பங்கைச் சுட்டிக்காட்டி வாதிட்டு அடுத்த கட்ட ஏற்பாடு குறித்துப் பேச வேண்டும்.
இந்தியச் சூழலும், இலங்கைச் சூழலும் மாறுபட்டவை. இந்தியாவில் பல்வேறு மொழி பேசும் மாநிலங்கள் உள்ள சூழலில் ஒன்றிய அரசுக்கும், மாநிலங்களுக்கும் ஒரு வகையான அதிகார இழுபறிச்சமநிலையும் , சமரசநிலைக்கான வாய்ப்பும் உள்ளது.
இலங்கையின் இரு மொழிச் சூழலில் தமிழ் மொழியும், அம் மொழியைப் பேசும் மக்களும் சிங்கள அரசால் இனவழிப்புக்குள்ளாக்கப்படும் சூழல் நிலவுகிறது.
இச் சூழலில் தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் அரசிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். இதற்கு உதவக்கூடிய வகையில், தமிழ் மக்கள் வசம் தனித்துவமாக அதிகாரங்கள் உள்ள அரசியல் ஏற்பாடு ஒன்றே தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும்.
மாகாண சபைகள் போன்று நாடு தழுவிய பொது ஏற்பாடுகள் தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு போதும் அமைய முடியாது. 13 ஆம் திருத்தச்சட்டத்தின் கீழ் அமைந்த மாகாண சபைகளின் தோல்விக்கு இதுவொரு முக்கிய காரணமாகும்.
இலங்கை அரச கட்டமைப்புக்குள் தமிழ் மக்களுக்குத் தேவையான தனித்துவமான அதிகாரங்கள் கொண்ட ஒரு தீர்வு முறையை எட்ட முடியாது. இதனால்தான் தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைச் சுதந்திரமும், இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசாக தமிழ் மக்கள் அடையாளம் கண்டார்கள்.
மாவீரர்களின் ஈகத்தினாலும், குருதியினாலுமே தமிழ் மக்களின் இலட்சிய தாகம் வலுப்பெற்றது. இத் தீர்வு சாத்தியமில்லையெனக் கூறுபவர்களோ அல்லது தாயகச்சூழலில் தமிழீழம் பற்றிப் பேசமுடியாத நிலையினால் வேறு தீர்வுகள் பற்றிப் பேசுபவர்களோ தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் இனவழிப்பைத் தடுக்கக் கூடிய தீர்வுமுறைகளை தமக்குள்ள வரையறைகளுக்குள் பேச முடியும். பேச வேண்டும்.
இவ்வாறு பேசும்போது, தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே வடிவமைக்க முடியும். நாம் இவ் அரங்கை நோக்கி அனைத்துலக சமூகத்தை இழுக்க வேண்டும்.
ஆனால் இப்போது நடப்பதைப் பார்த்தால் நமது தாயக அரசியற் தலைவர்கள் பலர் தெரிந்தோ தெரியாமலோ ஏனைய சக்திகள் போடும் அரசியல் அரங்கத்தில் ஏறி நின்று ஆடுவது போல் தெரிகிறது.
இது தமிழீழ மக்களுக்குப் பயன் தரும் செயலாக அமையாது. ஏனையோருக்குச் சேவை செய்யும் செயலாக மட்டும் அமைந்து விடும் ஆபத்தைக் கொண்டது எனபதனையும் எமது தலைவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
2022 ஆம் ஆண்டில் நாம் தமிழீழ தேச நிர்மாணத்தை மேலும் வலுப்படுத்தி வளம்படுத்த வேண்டும். தமிழர் தேசத்தை வலுப்படுத்தி வளம்படுத்தல் என்ற சிந்தனையுடன் நமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
தாயக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தி, சிங்களத்தின் தாயகக்கபளீகரத்தைத் தடுத்து நிறுத்தி, தமிழ் மொழியின் சிறப்பை நிலைநிறுத்தி, தாயக மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வைப் பலப்படுத்தி, சமூக நீதியைக் கொண்டாடும் மக்களாக, மாவீரர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு நாம் நமது தேசத்தை நிர்மாணம் செய்ய வேண்டும்.
சாதி, சமூக, பிரதேச, பாலின, பொருளாதார வேறுபாடுகளால் கூறு போடப்பட்ட மக்களாக இல்லாது தமிழீழ தேச மக்கள் நாம் எனத் தலை நிமிர்ந்து நிற்கும் வகையில் நமது தேச நிர்மாணம் அமைய வேண்டும்.
இதற்குத் தமிழ்த் தேசியம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். குறுந்தேசியவாதமாக அல்லாது அனைத்து மக்களையும் சமத்துவமாக மதிக்கும் பண்பு கொண்டதாக அமைய வேண்டும். புதிய உலகச்சூழலுக்கமையத் தன்னை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்குத் தாயகத்திலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள், தமிழக மக்கள், உலகத் தமிழ் மக்கள் இணைந்து அடம்பன் கொடி திரள்வதுபோல அணி திரள வேண்டும். பெண்களதும் இளையோர்களதும் பங்கு சமூகத்தில் அதிகரிக்கப்பட வேண்டும். மலர்ந்துள்ள புதிய ஆண்டில் இத்தடத்தில் தமிழ்த் தேசியம் வலுப்பெறும் வகையில் நமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்வோம்.
தமிழ் மக்கள் பெருமை மிகுந்த மரபுக்குச் சொந்தக்காரர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனப் பரந்த உலகப்பார்வை கொண்டு வாழ்ந்தவர்கள். தமிழ் மக்களின் இச் சிறப்பை நிலைநிறுத்தியவாறு எமது உரிமைகளை வென்றெடுத்து தமிழீழத் தனியரசை அமைப்பதற்கு அயராது உழைப்போம் என புத்தாண்டு
மலர்ந்துள்ள இத் தருணத்தில் உறுதி எடுத்துக் கொள்வோமாக என தெரிவித்துள்ளார்.