அநுர அரசை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம் மக்கள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சிறி தலதா வந்தனாவ எனும் யாத்திரை நிகழ்வு நேற்றைய தினத்துடன் நிறைவடைந்துள்ளது.
பாரிய எதிர்பார்ப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த யாத்திரை நிகழ்வு, அலைமோதும் மக்கள் கூட்டத்தினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிகழ்வு குறித்து பல சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும், கண்டி மாநகரில் முஸ்லிம் மக்களின் செயற்பாடு குறித்து அநுர அரசாங்கத்திற்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.
அடிப்படை வசதி
யாத்திரை நிகழ்வில் பங்கேற்ற பல இலட்சக்கணக்கான மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்த போதும், அங்கிருந்த முஸ்லிம் மக்களுக்கும், தேவையான பல உதவிகளை செய்துள்ளனர்.
மக்களுக்கு உணவு வழங்குவதுடன், தங்கியிருப்பதற்கும் இடங்களை வழங்கி முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். இதன்மூலம் இன, மத நிலையை கடந்து முஸ்லிம் மக்களின் செயற்பாடு குறித்து அநுர அரசு நன்றி தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் முஸ்லிம் மக்களின் செயற்பாடுகள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நன்றி தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல்முறையாக கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறக்கப்பட்டுள்ளதாகவும், இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இலங்கையர்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாத்திரை நிகழ்வு
குருணாகலை, பரகஹதெனிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாடு மாறி வருகிறது, அதற்கேற்ப நாம் புதிய வழியில் செயற்பட வேண்டும். நாம் ஒரு புதிய வழியில் செயற்பட வேண்டும் என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
இந்த நாட்களில் புனித தந்தத்தை வழிபடுவதற்கான யாத்திரை நடைபெறுகிறது. அங்கிருந்த மக்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்று பாருங்கள்.
குறிப்பாக, வரலாற்றில் முதல் முறையாக, கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் இரவு முழுவதும் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறந்திருந்தன.
இன நல்லிணக்கம்
நித்திரை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. அங்கு இன அல்லது மதப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. இன்னொரு இனத்திற்கான மரியாதை இருந்தது, இன்னொரு மதத்திற்கான மரியாதை இருந்தது.
அது மாத்திரமின்றி கண்டியில் வர்த்தக நிலையங்களை திறந்து கொடுத்தார்கள். மழை பெய்யும் போது கடைகளுக்குள் நுழையவும் அனுமதி கொடுத்தார்கள்.
சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்கள் என்றல்லாது, அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இலங்கை அரசாங்கம் இருக்கிறது என்ற உணர்வின் காரணமாக இது நடக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.