புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..!
சமகால அரசியல் பரப்பில் புலம்பெயர் தமிழர்களின் காய் நகர்த்தல்களே ஈழத்தமிழர்கள் சார்பாக வலுவான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.
தாயக அரசியல் பரப்பிலும் சரி, உலக அரசியல் பரப்பிலும் சரி, வலுவான ஒர் சக்தியாக புலம்பெயர் ஈழத்தமிழர்களின் தாயகம் நோக்கிய செயற்பாடுகள் வலுவான தாக்கங்களை காலத்துக்கு காலம் ஏற்படுத்தி வருகின்றன.
அவர்களால் அதிரடியாக ஏற்படுத்தக்கூடிய ஒர் அரசியல் மாற்றமாக சிறீலங்கா என விழிக்கப்பட்டு அழைக்கப்படும் இலங்கைத்தீவை இலங்கை என விழித்து அழைக்க முற்படுதல் அமையும்.
இதனால் ஏற்படும் மாற்றங்கள் ஈழத்தமிழரின் தனி நாட்டுத் தாயக கனவினை நிறைவேற்றும் படிமுறைகளில் வலுவான திருப்பு முனையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
தமிழில் அழைத்தல்
இலங்கைத் தீவினை உலகின் பல மொழியியலாளர்களால் அவர்கள் மொழிகளின் வழக்கில் பெயரிட்டு அழைத்து வந்திருக்கின்றனர்.இது பழைய வரலாறாக இன்றளவும் கற்பிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டலாம்.
உதாரணத்துக்கு பண்டைய தமிழர்கள் இலங்கையை ஈழம் என்று அழைத்திருந்தனர். அரேபியர் " செரன்டிப்" எனவும் அழைத்திருந்தனர்.
அவ்வாறே ஆங்கிலேயர் இலங்கையை சிலோன் என அழைத்திருந்தனர்.சிங்கள மக்கள் இலங்கையை சிறீலங்கா என்று அழைத்திருந்தனர்.இன்றும் அவ்வாறே அழைத்து வருகின்றனர்.
அப்படி இருக்கும் போது இன்றைய நிலையில் புலம் பெயர் தமிழர்களும் தாயகத்தில் வாழ்ந்துவரும் தமிழர்களும் இலங்கையை சிங்களவர் சூட்டி அழைக்கும் பெயரிலேயே அழைத்து வருகின்றனர்.
இது ஏன்?
சிறீலங்கா என்பது சிங்கள மொழியில் இலங்கையின் பெயர்.ஆனால் அதே இலங்கையின் தமிழ் பெயர் ஈழம்.அல்லது இலங்கை.
தமிழர்கள் தங்கள் மொழியுரிமையை பேணுவதாயின் தமிழ்ப் பெயரிலேயே அழைத்து வருதலே சாலப் பொருத்தமாகும்.
ஆனால் அது பற்றி ஏன் சிந்தித்து செயற்பட தமிழர்கள் தலைப்படாது இருக்கின்றனர்.
அவ்வாறு இலங்கையை தமிழர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்ப்பெயரிலேயே அழைக்க முற்பட்டால் உலக அரங்கில் தமிழர்கள் பற்றிய கவனம் அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் பெயர்
ஒரு இனத்தின் நபரொருவரின் பெயரைக் கொண்டே அவர் எந்த மொழி சார்ந்தவர் என்று அறிய முடிகிறது.
மற்றொரு சந்தர்ப்பத்தில் தனிநபரின் பெயரைக்கொண்டு அவர் வாழும் கலாசாரத்தினை அறிந்து கொள்ள முடியும்.
இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினையின் பிரதானமான சிக்கல் நிலைமையே மொழி மற்றும் கலாசார தனித்துவத்தை பேணி அரசியல் சுயநிர்ணய உரிமை சமமாக்கப்பட வேண்டும் என்பதே!
அப்படி இருக்கும் ஒரு சூழலில் ஏன் தமிழர்கள் பெயர்கள் விடயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர்.அல்லது வீரியமற்ற செயற்பாடுகளோடு கடந்து போய்க்கொண்டு இருக்கின்றனர் என்ற கேள்வி விடையில்லாது தொடர்ந்தவாறு இருக்கின்றது.
ஈழத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர்களை இடுதல் குறைவாகவே உள்ளது.அது மட்டுமல்லாது தங்கள் வியாபார நிறுவனங்கள் மற்றும் இடங்களுக்கும் தமிழ் சார்ந்த பெயர்களை இட்டு வழங்குவதும் குறைந்து வருவதையும் அவதானிக்கலாம்.
இது எவ்வாறு சாத்தியமாகிறது?
பிள்ளைகளின் பெயர்களை அல்லது தங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர்களையே வியாபார நிறுவனங்கள் அல்லது இடங்களுக்கு இட்டு வருகின்றனர்.தனிநபரின் பெயர் தமிழ்ப்பெயராக அமையும் போது ஏனைய விடயங்களிலும் தமிழ்ப்பெயர் வியாபித்து செல்லும் இயல்பான நிலை தொடங்கி விடும்.
இது விடுதலைப்புலிகளின் நிர்வாக நிலப்பகுதியில் இருந்த அவர்களது நிழல் அரசாங்கத்தில் நடைமுறையில் இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தனிநபரின் பெயரை தமிழில் தமிழர்கள் இட்டு வழங்க வேண்டும் என்றால் அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இலங்கையை எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழர்கள் தமிழால் எழுதி தமிழில் அழைத்துக்கொள்ள வேண்டும்.
இது விடயத்தில் ஒவ்வொரு தமிழர்களும் சிந்தித்து செயற்பட வேண்டும்.
கலாசார வேறுபாடுகள்
ஈழத்தமிழர்களின் கலாசார வேறுபாடுகள் இந்த பெயர் விடயத்தில் சிந்திக்க வைக்கின்றது.இது சாதாரணமாக சீர் செய்யப்பட முடியாதது என்றாலும் அது செய்தேயாக வேண்டிய ஒன்றாகும்.
அவ்வாறு ஒரு மாற்றம் கைகூடுமாக இருந்தால் தமிழர்களின் தனிநாடு நோக்கிய வாதம் உலக அரங்கில் அதிக கவனத்தைப் பெற்றுவிடுவதோடு எல்லா நாடுகளும் தமிழர்களின் தனிநாட்டுக்கோரிக்கை தொடர்பில் இலங்கை அரசிற்கும் நிபந்தனைகளை விதிக்க முற்படும்.அவ்வாறு விதித்தேயாக வேண்டிய கடப்பாட்டை உலக நாடுகளுக்கு அவற்றின் புறச்சூழல் உருவாக்கி கொடுத்து விடும்.
ஈழத்தமிழர்களில் கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றி வருவோரும் முஸ்லிம் சமயத்தை பின்பற்றி வருவோரும் இருந்து வருகின்றனர்.
அவர்களின் கலாசாரம் அவர்களது சமய விழுமியங்களை தழுவியதாக இருந்து வருகின்றது.அதனால் அவர்களிடையே தனிநபர்களின் பெயர்கள் தமிழ்ப்பெயர்களாக அமைவதில்லை. இங்கே தான் சாத்தியமல்லாத சாத்தியப்பாடு நடந்தாக வேண்டும் என குறிப்பிட்டிருந்தேன். இவ்வாறு தமிழ் பெயர்களை கிறிஸ்தவ தமிழர்களும் முஸ்லிம் தமிழர்களும் தங்களுடைய தனிநபர்களின் பெயர்களாக சூட்டிக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
அது சாத்தியமாக வேண்டுமானால் அவர்களது மதப்பெரியவர்களால் அது கட்டளையாக்கப்பட வேண்டும். மதவிழுமியங்களை கைவிடாது பின்பற்றியவாறு தமிழ் மொழிக்குரிய கௌரவத்தினை அவர்கள் வழங்க சிந்திக்க வேண்டும்.அதாவது பேசும் மொழியில் தனிநபர்களது பெயர்கள் இருக்க வேண்டும்.
ஆனாலும் இந்த கருத்தியல் தமிழ் பேசும் ஈழ கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்களோடு கலந்துரையாடுவதன் மூலமே இதன் சாத்தியப்பாடுகளை அறிய முடியும்.இத்தகையதொரு முயற்சியை ஈழத்தமிழர்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பது கண்கூடு.
ஆனாலும் இவ்விரு மதங்களின் புனித நூல்களான வேதாகமம் மற்றும் குர்ஆன் ஆகிய இரு நூல்களையும் தமிழில் படிக்க முடியும்.அதற்கு அந்த மதத் தலைவர்கள் ஆவணை செய்திருந்ததாலேயே அது சாத்தியமாகிற்று.அப்போது அது போல் இது மட்டும் ஏன் நடந்து விட முடியாது?
இவ்வாறான மாற்றங்கள் எல்லாம் ஒருமித்து மொழியால் ஒன்றாகிய வெளிப்பாடாக இருக்கும் என்றால் மொழிக்குரிய தனித்தேசியத்தை யாராலும் மறுக்க முடியாது.
இந்த ஒற்றுமை ஈழத்தமிழர்களை குழுக்களாக பிரித்து வைத்து கையாளும் வல்லரசு நாடுகளின் தந்திரங்களை பலவீனமாக்குவதோடு அந்நாடுகளை ஈழத்தமிழர்களின் இருப்புக்கு உரம்போடுவதற்காக சிந்திக்க வைக்கும் என்பதும் திண்ணம்.
ஈழம்: தமிழீழம்
இன்றைய அரசியல் கள யதார்த்தத்தில் பண்டைய தமிழர்கள் போல் இலங்கையை ஈழத்தமிழர்கள் " ஈழம்" என்று குறிப்பிட்டு அழைக்க முடியாது.
அது பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் அச்சமூட்டும் ஒரு விடயமாக மாறிப் போயுள்ளது.
தாயகத்தில் உள்ள தமிழர்கள் சில தமிழ் சொற்களை சுதந்திரமாக பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை இன்றும் தொடர்ந்து வருகின்றது.
உதாரணமாக புலிகள், கரும்புலிகள், மாவீரர், வீரச்சாவு, துயிலுமில்லம், ஈழம், தமிழீழம், போராளிகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
இச்சொற்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் அதிகளவில் அவர்களது செயற்பாடுகளின் போது பயன்படுத்தப்பட்டிருந்தன.அதனால் அச் சொற்களை பயன்படுத்துவோர் புலி ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுகிறார்கள்.
ஆனால் இவையெல்லாம் தமிழ் சொற்கள்.இவற்றை தமிழ் மொழி பேசும் யாரொருவரும் பயன்படுத்தலாம் என்பது சாதாரணமான வாதம் ஆகும்.ஆயினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொற்கள் என ஆகி வந்து விட்டதாக இலங்கை அரசாங்கங்களால் நோக்கப்படுமளவுக்கு இவை விரீயமிக்கவை ஆகியுள்ளன.
அது போலவே மாவீரன் என்ற சொல்லை முச்சக்கர வண்டிக்கு பின்னாக பயன்படுத்திய ஒருவர் தாயகத்தில் எச்சரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கறுப்பு நிற புலியை கரும்புலி என்றுதான் அழைக்க வேண்டும் என்பதும் உண்மை.
தமிழர்கள் இலங்கையை ஈழம் என்றார்கள்.அந்த வகையில் இலங்கையில் சிங்கள மக்களை அதிகம் கொண்ட பகுதியை சிங்க ஈழம் என்றும் தமிழர்களை அதிகம் கொண்ட பகுதியை தமிழ் ஈழம் என்றும் குறிப்பிடுதலில் அதிக நியாயப்பாடு உள்ளது.
தமிழ் + ஈழம் = தமிழீழம் என்பது தமிழ் இலக்கண வழி சரியானதொன்று ஆகும்.
ஆதலால் இன்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழர் பகுதிகளை தமிழீழம் என்றால் அது தவறாகவோ அல்லது இலங்கை சட்டங்களால் குற்றமாகவோ நோக்க முடியாது.அப்படி நோக்கினால் தமிழ் மொழியிலக்கண மற்றும் இலங்கை பொது வரலாற்று அடிப்படையில் அந்த சட்ட நோக்கு தவறாகும்.
ஆயினும் இலங்கையை குறிப்பிட்டு அழைப்பதற்கு தமிழீழம் மற்றும் ஈழம் என புலம் பெயர் தமிழர்கள் பயன்படுத்துவது இப்போதைக்கு தனிநாடு நோக்கிய அல்லது அவர்களது சுயநிர்ணய உரிமைகள் நோக்கிய பாதையில் அவர்களது பயணத்தை விரைவுபடுத்த உதவாது.மாறாக அதிக சிக்கல்களையும் தடைகளையும் ஏற்படுத்திவிடும்.
இலங்கை:Elankai
இலங்கையை சிறீலங்கா (Srilanka) என விழிப்பதை புலம் பெயர் தமிழர்கள் தவிர்க்கலாம்.அந்த இடங்களில் இலங்கை என்ற பதத்தையே அவர்கள் பயன்படுத்த வேண்டும்.
ஆங்கிலத்தில் பேசும் போதும் எழுதும் போதும் அவர்கள் " elankai" என்றவாறே பயன்படுத்த வேண்டும் என்பது என் வாதம்.
இது சாத்தியமான ஒன்றாகும்.முல்லைத்தீவில் ஒரு இடம் புளியம்பொக்கனை நாகதம்பிரான் கோவில் என தமிழை அப்படியே ஆங்கிலத்தில் ஆங்கில எழுத்தைக் கொண்டு குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தினை ஆங்கிலத்தில் குறிப்பிடும் போது அதனை Jaffna என குறிப்பிடுவதை விடுத்து yalappanam என எழுத முடியும்.ஆனாலும் அது நடைமுறையில் தமிழர்களிடையே இல்லை.இது போல் தான் இலங்கையை சிறPலங்கா என அழைத்து வருகின்றனர்.
இவ்வாறு பெயர்களை குறிப்பிடும் போது பொது நியதியில்லாத போக்கினை மாற்றிக்கொண்டால் இங்கு முன்வைக்கும் வாதம் சாத்தியமாகும்.
இவ்வாறு பயன்படுத்தும் போது இலங்கை என்ற தமிழர்களின் சொல்லாடலே தமிழர்களை நினைவுபடுத்திவிடும்.
தமிழர்கள் இலங்கை என்று பயன்படுத்தும் அதேவேளை சிங்களவர்கள் சிறீலங்கா என்று தான் பயன்படுத்துவார்கள். இப்போது உலக அளவில் ஒரே நாடு இருவேறு பெயர்களால் அடிக்கடி விழிக்கப்படும் போது உலக மக்களிடையே இலங்கைத் தீவில் வலுவான இரண்டு தேசிய இனங்கள் வாழ்கின்றன.
அவை தமக்குள் தனித்துவமானவை.அகவே சமஸ்டி முறையோ அல்லது அது போலொரு அரசியல் முறையோ வேண்டும்.
தனிச்சிங்கள பௌத்த நாடு என்ற கோட்பாடு வலுவிழந்து போகும்.அந்த கோட்பாட்டோடு உலக அரங்கில் முற்படும் போது அதற்கான விளக்கத்தினை அடிக்கடி செய்ய நேரிடும்.
இவ்வாறு அணுகுமுறை சவால்களை இலங்கை அரசாங்கம் மற்றும் அரசு எதிர்கொள்வதை புலம் பெயர் தமிழர்களால் உருவாக்கி விட முடியும்.
தெளிவான இரண்டு இனங்கள் இலங்கையில் இருப்பதை புலம்பெயர்ந்த தமிழர்களால் உலக நாடுகளிடையே அழுத்தமாக எடுத்துச் சொல்ல முடியும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 03 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
