தமிழ் இனத்தின் பிரச்சினையாக பார்க்கவும்! காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தலைவி ஆதங்கம்
இதை தமிழ் இனத்தின் பிரச்சினையாகப் பாருங்கள், எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றைக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி அ. அமலநாயகி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (24.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியாகவும் வடக்கு - கிழக்கு இணைந்த உப தலைவியாகவும் இருக்கிறேன்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வழக்கம்போல சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை வடக்கிலும் கிழக்கிலும் நாங்கள் பேரணிகளாக செய்து வருகின்றோம்.
இந்தமுறை அதனை ஒரு மாநாடாகச் செய்வதற்காக வடக்கு - கிழக்கு இணைந்த தாய்மார்களாக நாங்கள் ஒன்றிணைந்து இந்த மாநாட்டிற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.
சர்வதேச விசாரணை
எதிர்வரும் 30ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக இந்த பேரணியானது ஆரம்பிக்கப்பட இருக்கிறது. காலையில் 9 மணி போல இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா மண்டபத்திற்கு பேரணியாக வந்த பிற்பாடு, இந்த மாநாட்டிற்கான நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்பதை ஊடக வாயிலாக எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறோம்.

அந்த மாநாட்டின் நோக்கம், இவ்வளவு காலமும் உலகப் பொறிமுறையில் நம்பிக்கையிழந்து, சர்வதேச நீதிப் பொறிமுறையை வேண்டி, பாதிக்கப்பட்ட தரப்பாக நீண்டகாலமாக நாங்கள் சர்வதேச விசாரணையின் ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து, அதற்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 2017ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் இதனை முன்னெடுத்து வருகின்றோம்.
ஆனால், இதுவரைக்கும் எங்களுக்கான எந்தவொரு நீதியும் கிடைக்காத பட்சத்தில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இது ஒரு தமிழர்களின் பிரச்சினையாக பாருங்கள், எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றைக்கு நீதி கேட்டு நிற்கிறோம். இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.