தாயகத்தின் விடுதலைக்கான போராட்டம் பிரித்தானியாவில் ஆரம்பம்
தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான சைக்கிளோட்ட போராட்டப் பேரணியானது பிரித்தானியாவில் ஆரம்பமாகி உள்ளது.
குறித்த போராட்டமானது, இன்றையதினம் (15.02.2024) ஆரம்பமாகியுள்ள நிலையில், தொடர்ந்து 16 நாட்கள் ஐரோப்பிய நாடுகளூடாக பயணிக்க தாயக விடுதலை உணர்வாளர்கள் உறுதி கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவில் எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடைபெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கிலேயே குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுச்சிமிகு போராட்டப்பயணம்
இந்தப் போராட்டப்பயணத்தின் ஆரம்பத்தில் ஈகைச்சுடர்
ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு எழுச்சிமிகு போராட்டப்பயணத்தின்
அரசியல் விடுதலையின் வேட்கையாக தமிழின அழிப்பிற்கான நீதி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பணியாளர்களும் உணர்வாளர்களும் இணைந்து கையிலேந்திய தமிழீழத்தின் எழுச்சிக் கொடிகள், காற்றில் கம்பீரமாக அசைந்த வண்ணம் காணப்பட்டதோடு கொண்ட கொள்கையின் இலட்சிய உறுதியை பிரித்தானிய தேசத்தில் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்கள்
இந்நிலையில், ஆரம்பமாகிய போராட்டப் பயணமானது, தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்களை பிரசுரங்கள் மூலமும், பதாதைகள் மூலமும் தெரியப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், உறுதியேற்போடு தொடரும் இந்த தொடர் போராட்டப் பயணமானது, நெதர்லாந்து உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகள் ஊடாகச் சென்று ஜெனிவாப் பேரணியில் இணைய உள்ளது.
அத்தோடு, எதிர்வரும் மார்ச் மாதம் நான்காம் திகதி ஐ.நா திடல் முன்பாக அனைத்துலக ரீதியாக மாபெரும் மக்கள் போராட்டத்திற்கான முன்நகர்வுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |