தமிழரசுக் கட்சிக்குள் வலுக்கும் குழப்பங்கள்! மாவையை கடுமையாக விமர்சிக்கும் சாணக்கியன்
கட்சிக்குள் சகல குழப்பங்களுக்கும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த 75 வருட காலமாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகத் தமிழரசுக் கட்சி இருந்து வருகின்றது. குறிப்பாக இம்முறை தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றது.ஜ
மாவை மீது குற்றம்
ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய குழப்பங்களை விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக சீரமைக்கக் கூடிய காலம் கடந்துவிட்டது.
ஏனெனில் கட்சிக் குழப்பங்கள் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தலைவர் தெரிவு இடம்பெற்றபோது, நீங்கள் கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றீர்கள். எதிர்வரும் காலத்தில் இதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என நான் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாக கூறினேன்.
அதனைத் தொடர்ந்து செயலாளர் தெரிவு விடயத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவராகவே மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால் திட்டமிட்டது போன்று மாநாடு நடைபெற்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் எவையும் நேர்ந்திருக்காது.
இப்போது மாவை சேனாதிராஜா தான் பதவி விலகவில்லை என மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது மாவை சேனாதிராஜா காலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தான் தயாரித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் மாலையில் கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறினார். இரவு ரணில் விக்ரமசிங்க மாவையின் இல்லத்திற்கு வருகின்றார். தேர்தலின் பின்னர் தான் சஜித், ரணில் மற்றும் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஊடகங்களிடம் கூறுகின்றார்.
மாவை சேனாதிராஜாவின் மகனின் மனைவியின் தாய் சசிகலா ரவிராஜ் பொதுத் தேர்தலில் சங்கு சினத்தில் போட்டியிடுகின்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக மாவை சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார்.
ஆக இங்கே விட்டுக்கொடுப்பு என்பதைத் தாண்டி சகல குழுப்பங்களுககும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான். சிலர் மாவை சேனாதிராஜா கடந்த பாதையும், அவரது அர்ப்பணிப்பும் சாணக்கியனுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அதுபற்றி எமக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன் அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் இல்லை.
இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கட்சியை முறையாக வழிநடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கின்றார். எனவே இங்கு விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் கட்சி என்ற ரீதியில் சரியானதொரு தீரு்மானத்தை எடுக்க வேண்டும்.
மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அந்த பதவி விலகல் கடிதத்தை செயலாளர் ஏற்றிருக்கின்றார் எனில், அடுத்தக்கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மீண்டும் நான் பதவி விலகவில்லை. கடிதத்தை திரும்பப் பெறுகின்றேன் என்றால் என்ன செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.