தமிழரசுக் கட்சிக்கு இறுதிக் கிரியை செய்யும் பிரபல சட்டத்தரணி: அடுக்கப்படும் ஆதாரங்கள்
ஒரு நீண்ட நெடிய அரசியல் பாதையிலே வந்த முதிய தலைவர் பல ஆண்டுகளாக தமிழரசுக் கட்சிக்கு பாதாள குழியைத் தோண்டி வைத்தார். இப்போது மற்றுமொரு வழக்கறிஞர் வந்து அந்த குழிக்குள் தமிழரசுக் கட்சியை தள்ளி கிரியை செய்து கொண்டிருக்கின்றார் என்று பிரபல புலம்பெயர் தமிழ் தொழிலதிபரும் லங்காசிறி மற்றும் ஐபிசி ஊடக குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன்(kandiah baskaran) தெரிவித்தார்.
அவர்கள் யார் என்பது பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐபிசி தமிழின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிதறிய கூட்டமைப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சியின் இன்றைய நிலை உலகத் தமிழர்கள் பார்த்து ஏளனம் செய்யும் அளவிலும் சிரிக்கும் அளவிலும் இருக்கின்றது.
மேலும், இங்கு யாருக்கும் தமிழ் மக்களின் மீதோ மண்ணின் மீதோ காதலோ ஆசையோ கிடையாது. பதவியின் மீதும் அந்த பதவியினால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை, சுகபோகங்களை அனுபவிக்கும் பதவி ஆசையே இங்கு பலருக்கும் இருக்கின்றது. இதனை நான் வெளிப்படையாகவே கூறுவேன்.
காசை கொடுத்து தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக வேண்டிய தேவை எனக்குக் கிடையாது அதே சமயம் காசை வாங்கிக் கொண்டுதான் என்னை கட்சியின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கும் கிடையாது.
நான் நீண்ட நெடிய நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதீத ஈடுபாட்டை கொண்டவன். அதற்கு காரணம், ஈழத் தமிழருடைய போராட்ட வரலாற்றில் அழிக்கப்பட முடியாத ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது.
ஏனென்று சொன்னால் தமிழீழ விடுதலைப் புலிகளால் எல்லா கட்சிகளையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிறகு தமிழருக்கு இருந்த ஒரு சொத்தாக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பார்க்கின்றேன். ஆனால் அது ஒரு குறுகிய காலத்திலே ஒட்டுமொத்தமாக சிதறடிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |