பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்!
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னதாக வாஷிங்டன் இரண்டு முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள வார இறுதிப் பேச்சுவார்த்தைகளில் ஈரானியத் தூதுக்குழுவிற்கு அவர் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
லெபனானில் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும் ஆகியவையே அந்த இரண்டு நிபந்தனைகளாகும் என தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன் இவை இரண்டும் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளிலும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தாலும், முன்னெடுக்கப்பட உள்ள போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இது ஒரு முன்நிபந்தனையாகக் கோரப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த வார ஆரம்பத்தில் அமுலுக்கு வந்த போர்நிறுத்த உடன்படிக்கையில், இஸ்ரேலியத் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் லெபனானும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஈரானும் மத்தியஸ்த நாடான பாகிஸ்தானும் வாதிடுகின்றன.
எனினும், அமெரிக்க அதிகாரிகளும் இஸ்ரேலும் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர்.