இலங்கையின் கடன் வழங்குனர்கள் மற்றும் நாணய நிதியம் இடையில் முக்கியமான பேச்சுவார்த்தை
இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
பதவிக்காலம் முடிந்து வெளியேறும் நாணய நிதியத்தின் பிரதிநிதி
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழுவின் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் மூவரடங்கிய குழுவுக்குமிடையே விசேட சந்திப்பொன்று நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தனது பதவிக்காலம் முடிந்து வெளியேறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Tubagus Feridhanusetyawan மற்றும் புதிதாக நியமனம் பெற்றுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி திருமதி. Sarwat Jahan ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் வழங்குனர்களின் மாநாடு என்பன தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இ்ந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுவரப்படுவதுடன் இது தொடர்பில் அவரது கருத்துக்களை சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் சாகல ரத்நாயக்க இந்தக் குழுவிடம் உறுதியளித்தார் எனவும் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ் சமரதுங்கவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.