உலக நாடுகளுக்கு தலிபான்கள் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசை அங்கீகரிக்க தவறுவது பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன், உலகிற்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்று தலிபான்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர்.
அண்டை நாடான பாகிஸ்தான் வழியாக சீன சந்தைகளுக்கு ஆப்கானிஸ்தானின் ஏற்றுமதிகளை எடுத்து செல்ல உறுதியளித்துள்ள நிலையில் தலிபான்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்காத நிலையில், சீனாவும், பாகிஸ்தானும் தலிபான்களுடன் நல்லுறவை பேணி வருகின்றன.
மேலும் தலிபான்களுடன் முறையான உறவை ஏற்படுத்துமாறு உலக நாடுகளுக்கு இந்த 2 நாடுகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்தும் வருகின்றது.
இது குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்காவுக்கு நாங்கள் சொல்லவரும் செய்தி என்னவென்றால், எங்கள் அரசை அங்கீகரிக்காமல் இருப்பது தொடர்ந்தால், ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடரும். அது பிராந்தியத்தின் பிரச்சினை. பின்னர், உலக பிரச்சினையாக கூட மாறும்.
தலிபான்களும் அமெரிக்காவும் கடந்த முறை போருக்குச் சென்றதற்குக் காரணம் இருவருக்கும் முறையான தூதரக உறவுகள் இல்லாததே. போருக்கு காரணமான பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம்.அரசியல் சமரசத்தின் மூலமும் தீர்த்திருக்கலாம். எங்கள் அரசுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஆப்கன் மக்களின் உரிமையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.