சீன அச்சுறுத்தல் காரணமாக இராணுவ பட்டதாரிகளுக்கு தாய்வானில் மீண்டும் கம்யூனிச எதிர்ப்பு வகுப்புகள்
தாய்வான் நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் சீன இராணுவம் மற்றும் கடலோரக் காவல்படையின் ஊடுருவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுமார் கால் நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு தனது இராணுவ அகாடமி பட்டதாரிகளுக்கு மீண்டும் கம்யூனிச எதிர்ப்பு தேசபக்தி வகுப்புகளை தாய்வான் இராணுவம் கட்டாயமாக்கியுள்ளது.
குளிர் யுத்தக் காலத்தின் போது சீன கம்யூனிசத்தின் ஆபத்துகள் குறித்து இராணுவத்தினருக்குப் போதிக்கப்பட்டு வந்த இந்த விசேட வகுப்புகள், கடந்த 2002 ஆம் ஆண்டில் தேசபக்தி கல்வி எனப் பொதுவான பெயருக்கு மாற்றப்பட்டிருந்தன.
இராணுவ அச்சுறுத்தல்கள்
தற்போது சீனாவிடமிருந்து இராணுவ அச்சுறுத்தல்களும், உளவு பார்க்கும் ஊடுருவல்களும் மிகத் தீவிரமாகியுள்ளதால், இளம் அதிகாரிகள் தங்களது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும், நாம் ஏன் போராடுகிறோம், யாருக்காகப் போராடுகிறோம் என்ற இராணுவ இலட்சியத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக இந்த பழைய கம்யூனிச எதிர்ப்புப் பாடத்திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தாய்வானைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 110 க்கும் மேற்பட்ட சீன இராணுவ மற்றும் கடலோரக் காவல்படை கப்பல்கள் உலா வருவதாகத் தாய்வானின் தேசிய பாதுகாப்பு சபை பொதுச்செயலாளர் ஜோசப் வூ கவலை தெரிவித்துள்ளார்.
சீனாவின் இந்த பிரமாண்ட கடல்வழி அணிதிரட்டல் அதன் ஆதிக்க விரிவாக்கத்தின் தெளிவான அறிகுறி என்றும், தாய்வான் அரசு பெய்ஜிங்கின் உரிமைகோரல்களை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.