ஜப்பான் - பிலிப்பைன்ஸிடம் தாய்வான் முன்வைத்துள்ள கோரிக்கை
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையேயான கடல் எல்லைகளை வரையறுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்போது, தாய்வானின் இறையாண்மை மற்றும் கடல்சார் உரிமைகளை மதிக்க வேண்டும் என்று தாய்வான் வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டங்களின்படி தங்களின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் (EEZ) மற்றும் கண்டத்தட்டு ஆகியவற்றின் கடல் எல்லையை நிர்ணயிப்பதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளதாக ஜப்பானும் பிலிப்பைன்ஸும் கடந்த மாதம் அறிவித்திருந்தன.
இறையாண்மை உரிமை
இந்த எல்லைப் பகுதி தாய்வானின் கிழக்குக் கடற்கரையில் உள்ள பிரத்தியேக பொருளாதார மண்டலத்துடன் சில இடங்களில் ஒன்றுடன் ஒன்று இணைவதால், இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் சர்வதேச சட்டத்தின் கீழ் தாய்வான் அனுபவிக்கும் இறையாண்மை உரிமைகளைப் பாதிக்காது என்பதை இரு நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தாய்வான் கோரியுள்ளது.

தாய்வானின் இந்த கவலைகள் குறித்துப் பேசிய ஜப்பானிய தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா, ஜப்பானும் பிலிப்பைன்ஸும் கடல் எல்லைகளில் உடன்பாடு எட்டினாலும், அது மூன்றாம் தரப்பினரை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தாய்வானைத் தன் நாட்டுப் பகுதி என்று உரிமை கொண்டாடும் சீனா, ஜப்பான்-பிலிப்பைன்ஸ் நாடுகளின் இந்த எல்லைப் பேச்சுவார்த்தைக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், தாய்வானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தனது கடலோரக் காவல்படைக் கப்பல்களையும் அனுப்பியுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு தாய்வான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தாய்வான் சார்பில் பேசுவதற்கு சீனாவிற்கு எந்த உரிமையும் இல்லை என்றும், இராணுவ பலத்தைக் காட்டி பிராந்திய அமைதியைக் குலைக்க நினைக்கும் சீனாவின் முயற்சிகளைத் தாய்வான் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் தாய்வான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan