மீண்டும் மோசமாகும் வானிலை! ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
வட்டவளை - ரொசெல்ல பகுதியிலிருந்து, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக நோர்வுட் நெடுஞ்சாலை அலுவலகத்தின் நிர்வாக பொறியாளர் ஏ.எம்.சாதிக் தெரிவித்தார்.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
இதற்கிடையில், தற்போது கடுமையான வானிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, ஹட்டனிலிருந்து கித்துல்கல செல்லும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வாகனங்களை கவனமாக செலுத்துமாறு நிர்வாகப் பொறியாளர் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மற்றும் மழை நிலைமை இன்று முதல் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேகமூட்டமான வானம்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்த பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.