நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் இயற்கை எய்தினார்
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் நேற்று(14.08.2023) இயற்கை எய்தியுள்ளார்.
இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை. விடுதலைப் புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி.
இன விடுதலைக் களத்தில் முன்னோடியாக நின்று எங்களை வழிநடத்திய பெருமகன். நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர். பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய மூத்தவர் ஐயா தடா நா.சந்திரசேகரன் அவர்கள் நேற்று மாலை 6 மணியளவில் மறைவெய்தினார் எனும் துயரச் செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஐயாவின் மறைவையொட்டி, பெருந்துயரின் அடையாளமாக கட்சியின் அனைத்து மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், கிளை அலுவலகங்களிலும், பாசறை அலுவலகங்களிலும், கட்சியின் அனைத்து கொடிக் கம்பங்களிலும் கட்சிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.'' என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைவரின் பேரன்புக்கும், பாசத்திற்கும் உரியவரும், எமது தேச விடுதலையை இறுதிவரை நேசித்தவருமான பெரு மதிப்புக்குரிய "தடா சந்திரசேகரம்" ஐயா அவர்கள் 14.08.2023 அன்று தமிழகத்தில் சாவடைந்தார் என்கின்ற துயரச் செய்தியினை ஆழ்ந்த கவலையுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம் என உலகத் தமிழர் வரலாற்று மையம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,''தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தடா சட்டத்திற்கு எதிராக, மூத்த வழக்கறிஞராக இன்னாள் வரைக்கும் இச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளை மீட்பதில் ஈடுபட்ட பெருந்தகை. அதனாலே "தடா சந்திரசேகர்" என்ற அடையாளப் பெயரினால் எமது அன்புக்குரியவரானார்.
கடந்த காலங்களில் புலம்பெயர் தேசங்களில் பயணங்களை மேற்கொண்டு மாவீரர் நாட்களில் கலந்துகொண்டு தமது உணர்வை வெளிப்படுத்திய உன்னத மனிதர். இந்த தேச உணர்வாளன், நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்தவர்.
இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்கள், நாம் தமிழர் உறுப்பினர்கள் அனைவரது கரங்களையும் இறுக பற்றி இத் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.‘'என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |