இலங்கை வீரரின் சாதனையை முறியடித்த இந்திய வீரர்
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி மற்றும் இந்திய அணி ஆகியன மோதிக்கொண்டன.
இந்த போட்டி அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இந்தியாவிற்கு வெற்றி
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
185 ஓட்டங்களை இலக்காக கொண்டு பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.
அந்த அணி 7 ஓவர்கள் நிறைவில் 66 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழைக்குறுக்கிட்டது.
இதனால் டக்வத் லூயிஸ் முறைமைக்கு அமைய போட்டி 16 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில், பங்களாதேஷ் அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
புதிய சாதனை
இந்நிலையில் இன்றைய உலக கிண்ண போட்டியில் புதிய சாதனை ஒன்று நிலைநாட்டப்பட்டது.
இதற்கமைய இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலி இன்று தனதாக்கிக்கொண்டார்.
பங்களாதேஷ் அணியுடனான இன்றைய போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை இந்திய அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி, விராட் கோலி இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மொத்தமாக 1,030 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இதுவரை, இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற வரிசையில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன முதலிடத்தில் இருந்தார். இவர்மொத்தமாக 1,016 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது விராட் கோலி மஹேல ஜயவர்தனவின் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.