ஜனாதிபதியின் ஆதரவு படைகளின் நான்காவது நகரையும் கைப்பற்றிய சிரிய கிளர்ச்சியாளர்கள்
ஜனாதிபதி பஷர் அல்-அசாத்துக்கு எதிரான 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் ஆரம்ப இடமான, தாராவின் தெற்கு நகரத்தை இன்று (07) சனிக்கிழமையன்று கைப்பற்றியதாக சிரிய (Syria) கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கே சுமார் 100 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தலைநகர் டமாஸ்கஸுக்குப் பாதுகாப்பாகச் செல்லும் ஒப்பந்தத்தின் கீழ், தாராவிலிருந்து, அரச படைகளை திரும்பப் பெறுவதற்கு, இராணுவம் ஒப்புக்கொண்டதாக கிளர்ச்சியாளர் தரப்புகள் தெரிவித்துள்ளன.
13 ஆண்டுகளுக்கு முன்னர்
சமூக ஊடக காணொளிகள், உந்துருளிகளில் கிளர்ச்சியாளர்கள் தெருக்களில் வசிப்பவர்களுடன் கலந்திருப்பதைக் காட்டுகின்றன.
அத்துடன், கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், நகரின் பிரதான சதுக்கத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதையும் காணொளிகள் காட்டுகின்றன.
எனினும், அரச இராணுவம் அல்லது அசாத்தின் அரசாங்கத்திடம் இருந்து, இந்த செய்திகள் குறித்து உடனடி கருத்து எதுவும் இல்லை
அத்துடன் , கிளர்ச்சியாளர்களின் கூற்றை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை என்று ரொய்ட்டர்ஸும் தெரிவித்துள்ளது.
தாராவின் வீழ்ச்சியுடன், அசாத்தின் படைகள் ஒரு வாரத்தில் நான்கு முக்கிய மையங்களை கிளர்ச்சியாளர்களிடம் இழந்துள்ளன.
13 ஆண்டுகளுக்கு முன்னர், உள்நாட்டுப் போர் தொடங்கிய போது 100,000 க்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருந்த தாரா, எழுச்சியின் குறியீட்டு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
ஜோர்டான் எல்லையில் சுமார் 1 மில்லியன் மக்கள்
இது ஜோர்டான் எல்லையில் உள்ள சுமார் 1 மில்லியன் மக்கள் வசிக்கும் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.
இந்தநிலையில், தமது படைகள் ஹோம்ஸ் நகரை கைப்பற்ற முன்னேறி வருவதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டால், தலைநகர் டமாஸ்கஸும், ரஷ்ய கடற்படைத் தளம் மற்றும் விமானத் தளமும் என்பனவற்றின் தொடர்புகள் துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தாக்குதலுக்கு தலைமை தாங்கும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமியக் குழுவை உள்ளடக்கிய கிளர்ச்சிப் பிரிவுகளின் கூட்டணி, ஹோம்ஸில் உள்ள அசாத்தின் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் படைகளை விலகிச் செல்லுமாறு கடைசி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்திற்கு முன்னதாக, ஆயிரக்கணக்கான மக்கள் ஹோம்ஸில் இருந்து அரசாங்கத்தின் கோட்டைகளான லடாக்கியா மற்றும் டார்டஸ் கடற்கரை பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |