கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசமாக சிக்கிய சிரிய பிரஜைகள்
போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி ரோமுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஏழு சிரியப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிரியா நாட்டைச் சேர்ந்த மூன்று ஆண்களும் நான்கு பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இந்தியாவின் சென்னை நகரத்திற்கு செல்வதற்காக இன்று காலை 07.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த கடவுச்சீட்டுகள் போலியானவை என தெரியவந்துள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த போலி கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்கு தலா 2 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் எழுவரும் முதலில் மலேசியாவுக்கு சென்று அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |