வவுனியா வாள் வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!
வவுனியா- பம்பைமடுப் பகுதியில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு, கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய தினம் (18.04.2023) பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு தினத்தன்று (14.04.2023) இரவு 8.30 மணியளவில் வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் நோக்கி மோட்டர் சைக்கிளில் சென்ற 8 மாத கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தாயார் மீதே இந்த வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் அணிந்திருந்த சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 6 அரைப் பவுண் நகைகளை கொள்ளையடித்துள்ளதுடன், அவர்களது பையில் இருந்த ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தொலைபேசிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது, காயமடைந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் தாய் ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பூவரசன்குளம் பொலிஸார், 30
வயதுடைய இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
தெரிவித்துள்ளனர்.



