இந்தியாவில் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட அரசாங்க அதிகாரி
இந்தியாவில் உள்ள ஒரு அரசாங்க அதிகாரி தனது தொலைந்து போன தொலைபேசியை மீட்டெடுப்பதற்காக நீர்த்தேக்கத்தின் பெருமளவு நீரை வெளியேற்ற உத்தரவிட்டமைக்காக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள கெர்கட்டா அணையில் உள்ள நீரே குறித்த அதிகாரியினால் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.
ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவு ஆய்வாளரான இந்த அரச அதிகாரி செல்ஃபி எடுக்கும் போது, அவரது கைப்பேசியை குறித்த நீர்தேக்கத்தில் வீழ்ந்துள்ளது.
முக்கியமான அரச தரவுகள்
இதனையடுத்து உள்ளூர் சுழியோடிகளை நாடியபோதும் அவர்களால் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான அந்த கைப்பேசியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து நீர் இறைக்கும் பாரிய இயந்திரங்களை வரவழைத்து, மூன்று நாட்களாக மில்லியன் கணக்கான லீட்டர் நீரை அவர் வெளியேற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கைப்பேசி கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், அது இயங்க முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்ததாக தெரியவருகிறது.
வாய்மொழி அனுமதி
முன்னதாக அருகில் உள்ள கால்வாயில் சிறிது தண்ணீரை வெளியேற்றப்போவதாக ஒரு அதிகாரியிடம் வாய்மொழி அனுமதி பெற்ற நிலையிலேயே குறித்த அதிகாரி நீர்த்தேக்கத்தின் நீரை வெளியேற்றியுள்ளார் என தெரியவருகிறது.
கைப்பேசியை கண்டுபிடிப்பதற்காக அவரால் வெளியேற்றப்பட்ட நீர், 6 சதுர கிமீ அதாவது 600 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய போதுமானது என கூறப்படுகிறது.