தனியார் பேருந்து சாரதியுடன் முரண்பட்ட நடத்துனருக்கு பணித்தடை!
மன்னார் பேருந்து நிலையத்தில் சக தனியார் பேருந்துச் சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துநருக்கு காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த 08.04.2026 அன்று பேசாலை மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த மற்றொரு தனியார் பேருந்தின் சாரதியுடன் குறித்த தனியார் பேருந்து நடத்துநர் முரண்படும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த நடத்துநரின் ஒழுங்கீனமான செயற்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பணித்தடை
இதனடிப்படையில், சர்ச்சைக்குரிய நடத்துநருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில், அவர் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினூடாக வழியனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு பேருந்திலும் பணியாற்றுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரிடையே ஏற்படும் இவ்வாறான ஒழுக்க மீறல்கள், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகள், மேலதிக கட்டணம் அறவிடப்படுதல் அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டால், எவ்வித தயக்கமுமின்றித் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri