அங்குணகொலபெலஸ்ஸ சிறைக்கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவது இடைநிறுத்தம்
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகளை வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையின் கைதிகளிடையே நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது இணையவழியில் நடத்தப்பட்டு வருகின்றன.
சிகிச்சை
ஏனைய சிறைச்சாலைகளிலிருந்து கைதிகளை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து வருவதும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் 7 கைதிகளுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைதிகளுக்கு சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.