யாழ்.வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டவர்கள் கைது
யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (10) அதிகாலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமராட்சி-கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட நடவடிக்கை
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை கடற்படையினர் கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன் படகுகள் மற்றும் இயந்திரங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்கள் அதிகரித்து வருவதாகவும் இவர்களை கட்டுப்படுத்த சட்டம் கடுமையாக மாற்றப்படவேண்டும் எனவும் மக்கள் விசனம் தெரிவிப்பதோடு இந்த சட்டவிரோத தொழில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் அதிகளவு இடம்பெறுகின்றன என கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
