டேன் பிரியசாத் கொலையின் பிதான சந்தேக நபர் கைது!
சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
துப்பாக்கிச் சூடு
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கொழும்பு சினமன் கார்டன் பகுதியில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளரான டேன் பிரியசாத், 'லக்சந்தா சேவன' வீட்டுத் திட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், காயங்கள் தீவிரமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அறிக்கைகளின்படி, அவருக்கு நான்கு துப்பாக்கிச் சூட்டுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணை
இந்த தாக்குதலில், வேறு ஒரு நபரும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பிஸ்டல் மூலம் பலமுறை துப்பாக்கிச் சூட்டுப்படுத்திய பின், அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முக்கிய சந்தேக நபரின் கைது, விசாரணைக்கு முக்கிய திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
