பொலிஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்த சந்தேகநபர்! மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் வைத்து சந்தேகநபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக இளைஞரொருவர் உயிரிழந்திருந்தார்.
பொலிஸ் அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற தாக்குதல்
உயிரிழந்தவர், கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயது இஷாரா ஹர்ஷ குமார என்பவராவார்.

பொலிஸ் அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற தாக்குதலால் மரணம் நிகழ்ந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேற்று (25) காலை சந்தேக நபரைப் பார்க்க பொலிஸ் நிலையம் வந்தபோது, அவர் தாக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாகவும், தங்களின் விடாப்படியான வேண்டுகோளின் பேரில் சந்தேகநபரை ஹோமாகம மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், அவர் அதற்குள் உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தற்போதைக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக ஹோமாகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளின் சேவைகள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.
பிரேதப்பரிசோதனை
ஹோமாமகம பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி, ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் ஆகியோரே சம்பவம் தொடர்பில் தற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகத்திற்கிடமான மரணம் மேலதிக விசாரணைக்காக மேற்கு தெற்கு குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (27) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அதன் அறிக்கையின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.