சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்ததாக வெளியான செய்தி: கல்கிஸ்சை பொலிஸார் மறுப்பு
கடந்த மே 9ம் திகதி நாட்டில் பதிவாகிய வன்முறைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கோட்டா கோ கம தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக மௌபிம ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் எமது செய்திச்சேவை கல்கிஸ்சை பொலிஸாரிடம் வினவிய போது “அது தொடர்பிலான தகவல் எதுவும் தமக்கு தெரியாது” என தெரிவித்தனர்.
முதலாம் இணைப்பு
கடந்த மே 9ம் திகதி நாட்டின் பல பகுதியில் பதிவாகிய வன்முறைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக மௌபிம ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மே மாதம் ஒன்பதாம் திகதி கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலையடுத்து நாடு முழுவதும் பதற்ற நிலை எற்பட்டு வன்முறை வெடித்தது.
மொரட்டுவை நகரசபை வாகனங்கள் சேதம்
இதன்போது மொரட்டுவை நகரசபைக்குச் சொந்தமான தீயணைப்பு இயந்திரம் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு தீவைத்துச் சேதமாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
கோட்டா கோ கம தாக்குதல்: மொரட்டுவை மேயரின் மகன் உட்பட அறுவர் கைது |
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கல்கிஸ்சை பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்திருந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்தேகநபர் உயிரிழப்பு
இந்நிலையில் குறித்த நபர் இன்று திடீரென உயிரிழந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கல்கிஸ்சை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மௌபிம செய்தி வெளியிட்டுள்ளது.




