மக்களின் அடிப்படை உரிமைகளை அரசு ஒருபோதும் பறிக்காது - அமைச்சர் சுசில் ரணசிங்க உறுதி
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும், இனிவரும் காலங்களிலும் தவறாக பயன்படுத்தப் போவதில்லை என்றும், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' ஜனநாயகத்துக்கு விரோதமானதாக அமையாது என்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (29.10.2026) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு சட்டத்தையும் நாங்கள் இயற்றப் போவதும் இல்லை
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அரசு ஒருபோதும் செயற்படப் போவதில்லை. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு சட்டத்தையும் நாங்கள் இயற்றப் போவதும் இல்லை.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படவில்லை. இனிவரும் காலங்களிலும் அவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்றார்.

கடந்தகால அரசுகளின் செயற்பாடுகள் குறித்து விமர்சித்த அவர், "கடந்தகால அரசுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தமது அரசியல் பழிவாங்கல்களுக்காகவே பயன்படுத்தின. குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகப் பல அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டார்கள்.
எதிராக பயன்படுத்தப்படும் சட்டம்
ஆனால், தற்போதைய ஆட்சியில் அவ்வாறான சூழல் முற்றாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படும்போதே, அவர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.
பாதாள உலகக் குற்றங்களையும் போதைப்பொருள் கடத்தலையும் முற்றாக இல்லாதொழிக்க வேண்டுமாயின், அதற்கெனப் பிரத்தியேகமான வலுவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதற்கமைவாகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது." - என்றார்.