இலங்கையில் அதிகளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறும் துறைகள்
இலங்கையில் அதகிளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறும் துறைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கையில் லஞ்ச ஊழல் மோசடிகள் மிக அதிகளவில் இடம்பெறும் மூன்று முக்கிய துறைகளாக போலீஸ், அரசியல், சுங்கத்துறை ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற கருத்தரங்கொன்றின் போது லஞ்ச ஊழல் தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் நீல் இட்டவெல தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வில் முதன்மையான இடத்தில் பொலிஸ், அதன்பின் அரசியல் மற்றும் சுங்கத்துறை இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அடுத்தபடியாக, குடிவரவு-குடியகல்வுத் துறை, பாடசாலைகள் மற்றும் கல்வி அமைச்சு, நிலப் பதிவு அலுவலகம், மாகாணசபைகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், பிராந்திய செயலகங்கள், மற்றும் பிறப்புப் பதிவு திணைக்களம் ஆகியனவும் ஊழல் அதிகம் காணப்படும் துறைகளாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, சுங்கத்துறை, உள்நாட்டு வரித்துறை மற்றும் மாகாண வருவாய் அலுவலகங்கள், மதுபான வரித்துறை, குடிவரவு துறை மற்றும் வாகனப் பதிவு துறை ஆகிய ஐந்து துறைகள் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.



