வெறும் வார்த்தை தீர்வைத் தராது: நீதி - நியாயம் வேண்டும்! அநுரவிடம் சுரேஷ் வலியுறுத்து
ஜனாதிபதி அவர்களே, வெற்று வார்த்தை ஜாலங்கள் தீர்வைத் தராது. நடைமுறையில் சட்டம் ஒழுங்கு, நீதி, நியாயம் என்பவை காப்பாற்றப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிரஜாசக்தி நியமனத்தைக் கண்டித்தும், பொங்கல் பண்டிகைக்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து தெரிவித்த கருத்து தொடர்பிலும் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் யாழ். விஜயம்
அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் கிராமப்புறங்கள் அனைத்தும் கிராம சேவகர் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கிராம சேவகர் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் கிராம சேவகர் ஒருவர் பொறுப்பாக இருக்கின்றார்.
அந்தக் கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் பிரச்சினைகள், அந்தக் கிராமம் பற்றிய புள்ளிவிவரங்கள், அபிவிருத்திகள் அனைத்தையும் தனது விரல் நுனியில் வைத்திருப்பவர்களாகக் கிராமசேவகர்கள் இருக்கின்றனர்.
இதற்கு மேலாக மக்கள் குழுக்கள் வரக்கூடிய விடயங்களைக் கையாள்வதற்கான பொறுப்பும் கடமையும் இருப்பதுடன் பொலிஸாருக்கு முன்னராக இவர்களே இந்த விடயங்களைக் கையாள்கின்றனர்.
இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் என ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவரும் அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான பணிகளைக் கண்கானிக்கின்றார்.
மூன்றாவதாக கிராமங்களில் இருக்கக்கூடிய வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சமுர்த்தி உத்தியோகத்தர் என மற்றொருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர்களுக்கூடாக மக்களுக்கான கடன் வசதிகள், மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவர்கள் அனைவரும் அரச உத்தியோகத்தர்களாக தமது மேலதிகாரிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
தற்போது இவை அனைத்திற்கும் மேலாக, நான்காவது உத்தியோகத்தராக வந்திருக்கக்கூடிய ஜே.வி.பி. - என்.பி.பி. அரசாங்கமானது பிரஜாசக்தி என்ற பெயரில் மேற்சொன்ன கடமைகளைக் கண்காணிப்பதற்காக மேலதிகமாக ஒருவரை நியமனம் செய்கின்றது.
இவர்களது கல்வித்தகைமை, இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் என்று எதுவுமே கிடையாது. இவர்களுக்கான அடிப்படைத் தகுதி ஜே.வி.பியின் கட்சி உறுப்பினராக இருப்பது மட்டுமே. இவர்களுக்கு மேலதிகாரிகளாக யாரும் கிடையாது.
யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடும் கிடையாது. இவர் நேரடியாக மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளருடன் தொடர்பில் இருப்பார். ஒருங்கிணைப்பாளர் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சர்களாகவோ இருக்கின்றனர்.
பிரஜாசக்தி உத்தியோகத்தர் நியமனம்
ஆகவே, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களையும் மீறி, உள்ளூராட்சி சபைகளின் தீர்மானங்களையும் மீறி, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஓரங்கட்டி கிராமப்புறங்களில் அரசாங்கம் தனது இருப்பை உத்தரவாதப்படுத்தும் முகமாக, சட்டவிரோதமான முறையில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இது குறித்து கேள்வி எழுப்பப்படுமாக இருந்தால், இந்த பிரஜாசக்தி உத்தியோகத்தர் என்பவர் சம்பளமற்ற தன்னார்வ சேவை செய்பவர் என்று கூறப்படுகின்றது.
அவ்வாறாயின், ஏற்கனவே மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்து கிராம மட்டத்தில் மூன்று உத்தியோகத்தர்கள் பணியாற்றுகின்ற நிலையில் அவர்களை ஓரங்கட்டி இந்த புதிய உத்தியோகத்தருக்கான தேவை ஏன்? என்ற கேள்விக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து பதில் இல்லை.
தற்போது இருக்கக்கூடிய என்.பி.பி. - ஜே.வி.பி. அரசாங்கமானது தன்னை ஒரு நேர்மையான, நீதியான, கட்சி சார்பற்ற, நாட்டை முன்னேற்றுகின்ற ஒரு புதிய அரசாங்கமாக தன்னைப் பிரகடனப்படுத்தி வருகின்றது.
முன்னர் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் மேலிருந்து கீழ்மட்டம் வரை தமது கட்சி சார்ந்தவர்களையே பல்வேறு துறைகளுக்கும் நியமித்தார்கள் என்றும் இன்றைய அரசாங்கம் அவ்வாறின்றி திறமைக்கு முன்னுரிமை கொடுப்போம் என்றும் அத்தகைய தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இன்று அரசாங்கம் கொண்டு வந்திருக்கக்கூடிய பிரஜாசக்தி நியமனம் என்பது முழுக்க முழுக்க கட்சி சார்பானதாகவே இருக்கின்றது.
மக்களின் காணிகள் விடுவிப்பு
இதனைப் போலவே, மக்களின் காணிகளை விடுவிப்போம் என்று கூறியவர்கள், மக்களின் காணிகளை படையினர் மூலம் அடாத்தாகக் கையகப்படுத்தி, அதில் புத்தர் கோயிலைக் கட்டி, காணிகளை மீள வழங்க முடியாது என்று கூறுவதும் கூட, ஒரு சட்ட விரோத செயற்பாடாகும்.
அந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக நீதியானதும் நியாயமானதுமான எத்தகைய தீர்வையும் இவர்களாலும் கொடுக்க முடியாது என்பதை இந்த அரசாங்கமும் தெளிவுபடுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல், பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி, தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை நிர்மாணம் தொடர்பாகவும், அந்தக் காணி அபகரிப்புக்கு எதிராகவும், பௌர்ணமி தோறும் நடைபெறும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி நக்கல் அடித்ததோடு மட்டுமன்றி, தமிழ் இனவாத சக்திகளே அந்த போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் கூறியுள்ளார்.
அவரைப் பொறுத்தவரையில் சட்டவிரோதமாகக் காணிகளை அபகரிப்பது இனவாதமல்ல, அந்த சட்டவிரோத காணிகளில் புத்த விகாரை கட்டுவதும் இனவாதமல்ல. ஆனால் காணிகளைப் பறிகொடுத்தவர்கள் தமது காணிகளைத் திரும்பக் கோருவது இனவாதமாகும்.
மொத்த நிர்வாகத்தில் நியமனங்களும் சட்டவிரோதமாகச் செயற்படுத்தப்படுகின்றன. காணி, பூமி விடுவிப்புகளும் சட்டவிரோதமாகவே செயற்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன், சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கோருகின்றது.
ஜனாதிபதி அவர்களே, வெற்று வார்த்தை ஜாலங்கள் தீர்வைத் தராது. நடைமுறையில் சட்டம் ஒழுங்கு, நீதி, நியாயம் என்பவை காப்பாற்றப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.