இந்தியா மௌனம் கலைக்க வேண்டும்! சுரேஷ் வலியுறுத்தல்
இந்திய விஜயத்தின் போது 13ஆவது திருத்தம் அல்லது அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசப்படவில்லை என ஜே.வி.பி. கூறுவதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது எனத் தெரியவில்லை என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்துரைத்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இக்கூற்றுத் தொடர்பில் தனது சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு
இலங்கை அரசின் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளின் போது, இந்தியா இந்த விடயங்கள் குறித்து அழுத்தமாகவோ அல்லது மேலோட்டமாகவோ தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், இம்முறை இது பற்றிப் பேசப்படவில்லை என ரில்வின் சில்வா கூறுவது எந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் இந்தியாவே தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் அழுத்தங்களுக்கு அப்பால், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்தத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கான பொறுப்பை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.