இந்து சமுத்திர பிராந்தியத்தை வல்லாதிக்க அதிகார போட்டிக்கான களமாக்க வேண்டாம் - அரசுக்கு சுரேஷ் எச்சரிக்கை
இந்து சமுத்திரப் பிராந்தியம் எப்போதும் அமைதி பூங்காவாகத் திகழ வேண்டும் என்பதில் இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளது.
எனவே, அந்த அமைதி முயற்சியைக் குலைக்கும் விதத்தில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை அமைந்துவிடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீன உளவுக் கப்பலின் வருகை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"சீனாவின் உளவுக் கப்பல் ஒன்று இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரவிருப்பதாகவும், ஏறத்தாழ ஒருவாரம் இங்கு தங்கியிருந்து ஆய்வுகள் செய்ய இருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் உளவுத்துறை கப்பலின் வருகை
இந்த உளவுக் கப்பலானது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிப்பதுடன், செய்மதிகள் அனுப்புவது போன்றவற்றைக் கண்காணிக்கும் திறன் கொண்டதுமாகும்.
மேலும், இந்தக் கப்பலைச் சுற்றி 750 சதுர கிமீ பரப்பளவிற்கு சகலவற்றையும் கண்காணிக்கும் தொழில்நுட்பத் திறன்களையும் கொண்டது. இலங்கை என்பது இந்தியாவுக்கு மிக அண்மித்த நாடாக இருக்கின்றது. குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு எல்லைப் பரப்புக்குள் இலங்கையும் உள்ளடங்குகின்றது.
இந்தியாவின் தென் மாநிலங்களில் அணுசக்தி நிறுவனங்களும், செய்மதி ஏவுதளங்களும் இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்களும் உள்ளன.
இத்தகைய ஒரு சூழ்நிலையில், சீன உளவுக் கப்பலின் வருகை என்பது இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என்பதற்கு அப்பால் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக அமையும்.
அணிசேரா நாடுகளின் கூட்டு
இது ஒருபுறமிருக்க. இந்து சமுத்திரப் பிராந்தியமானது வல்லரசுகளின் போட்டியிலிருந்து விடுபட்டு, ஓர் அமைதிப் பிராந்தியமாக இருக்க வேண்டும் என்பதில் நேருவும், சாஸ்திரியும் இந்திராகாந்தியும் சிரத்தையுடன் இருந்தார்கள். அதன் காரணமாகவே அவர்கள் அமெரிக்க சோவியத் வல்லரசுகளுடன் இணையாமல் அணிசேரா நாடுகளின் கூட்டு ஒன்றை உருவாக்கினார்கள்.
சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமரான நேரு, அணிசேரா நாடுகளின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவராக இருந்து அணிசேரா நாடுகளின் அணியை உருவாக்கினார்.
தற்போது, இந்து சமுத்திரப் பிராந்தியமானது அவ்வாறான அமைதிப் பிரதேசம் என்ற நிலையிலிருந்து அமெரிக்க சீன வல்லரசுகளின் வல்லாதிக்கப் போட்டியின் களமாக மாறுகின்றதா என்ற அச்சம் எழுகின்றது.
2016ஆம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு வருகை தந்தபோது இந்தியா தனது கவலையைத் தெரிவித்திருந்தது. அன்று இலங்கை அரசு இந்தியாவின் கவலைக்குரிய விதத்தில் பதிலளிக்கவில்லை. இப்போதும் சீனா தனது உளவு கப்பலை இலங்கைக்குள் நங்கூரமிடத் திட்டமிட்டுள்ளது.
இதற்கும் இந்தியா தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசு அந்தக் கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காகவே வருகை தருவதாகக் கூறுகின்றது.
இந்து சமுத்திரத்தின் அமைதியின்மை
இலங்கையின் இத்தகைய அணுகுமுறைகளைப் பார்க்கின்றபோது இந்து சமுத்திரத்தின் அமைதியின்மைக்கு இலங்கையும் துணைபோகின்றதோ என்ற கேள்வி பலமாக எழுகின்றது.
இலங்கையில் ஏற்படும் இனமுரண்பாடுகள் மற்றும் இலங்கை ஏனைய வல்லாதிக்க சக்திகளின் பிடிக்கு உட்படுவது என்பது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என்பதில் இந்தியா எப்போதும் கரிசணை கொண்டு செயற்பட்டுள்ளது.
அதன் காரணமாகவே, இலங்கையில் இனமுரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் இலங்கை ஏனைய வல்லாதிக்க சக்திகளின் ஆளுமைக்குள் செல்லக்கூடாது என்பதிலும் இந்தியா கரிசணையுடன் செயற்பட்டு வந்திருக்கின்றது.
ஆனால், அண்மைக்கால இலங்கை அரசின் நடவடிக்கைகளானது இந்தியாவின் இந்த முயற்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என அஞ்சுகின்றோம்.
இலங்கையின் தவறான வெளியுறவுக் கொள்கைகள் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்ல என்பதையும் நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.
எனவே, இலங்கை அரசின்
வெளிநாட்டுக் கொள்கையில் காத்திரமான மாற்றங்கள் தேவை எனவும், இந்து சமுத்திரப்
பிராந்தியம் அமைதிப் பிராந்தியமாகத் திகழ வேண்டும் என்பதற்கு முதன்மை ஸ்தானம்
கொடுக்க வேண்டும் என்பதிலும் இலங்கை கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் ஈழ
மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோருகின்றது என்றுள்ளது.