கடலட்டை பண்ணைத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை
வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் இந்தியப் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும் கடலட்டை பண்ணைத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் கடற்றொழில் அமைச்சரின் முயற்சி பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்றும் அத்தகைய சிக்கல்கள் தோன்றாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அமைச்சரின் பொறுப்பாகும்.
விலைமதிப்புள்ள ஏற்றுமதிப்பொருள்
வடக்கு மாகாணத்தில் கடலட்டை பண்ணைகள் மிகப் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடற்றொழில் அமைச்சர், தற்பொழுது ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு கடலட்டை பண்ணைகள் இருப்பதாகவும் இந்தப் பண்ணைகளை ஐயாயிரமாக உயர்த்த வேண்டுமென்றும் அதற்கான நடவடிக்கைகளைத் தான் எடுப்பதாகவும் ஊடகங்களுடாக செய்திகளை வெளியிட்டுள்ளார்.
கடலட்டைகள் என்பது மிக விலைமதிப்புள்ள ஏற்றுமதிப்பொருள் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. முன்னரும் பாக்குநீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவிலிருந்து கடலட்டைகள் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால் இப்பொழுது கடலட்டை பண்ணைகளை உருவாக்கி, அதன் மூலம் பாரிய அந்நியச் செலாவணியைக் கொண்டுவர முடியுமென்றும் குறுகிய காலத்திற்குள் கடற்றொழிலாளர்கள் பெரும் பணம்படைத்தவர்களாக மாறலாம் என்றும் அமைச்சரினால் ஆசைவார்த்தைகள் கூறப்படுகின்றது.
கடலட்டை பண்ணைகள் அமைப்பதெற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன.
கடலட்டை பண்ணைகள்
இரண்டு கடலட்டைப் பண்ணைகளுக்கு இடையில் ஏறத்தாழ 1000மீ இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. உருவாக்கப்பட்டுள்ள பண்ணைகளில் அத்தகைய இடைவெளியில்லை என்பது கடற்றொழிலாளர்களின் குற்றச்சாட்டுகளாக இருக்கின்றது.
இரண்டாவதாக அப்பிரதேசங்களில் உள்ள கடற்றொழிலாளர்கள்ளுக்கு பண்ணைகளை வழங்குவதை விடுத்து,அப்பிரதேசங்களைச் சாராதவர்களுக்கும் வெளியாட்களுக்கும் அந்தப் பண்ணைகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
மூன்றாவதாக குறுகிய காலத்திற்குள் வருமானம் ஈட்ட முடியுமென்று கடற்றொழிலாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆனால் புத்தளம், சிலாபம் போன்ற இடங்களில் இறால் பண்ணையில் ஏற்பட்ட இழப்புகள் கடலட்டைகள் பண்ணைகளுக்கும் ஏற்படலாம் என்ற அச்சமும் ஐயமும் தோன்றியுள்ளது.
கடலட்டைப் பண்ணைகளைத் தோற்றுவிப்பதன் ஊடாக, பாரம்பரியமாக எமது மீன்பிடி, அதனூடாக வடக்கு மாகாணம் பெற்றுவந்த கடலுணவுகள், ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் இவையெல்லாம் அழிந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் அமைச்சரின் பிணாமிகளின் பெயரில் கடலட்டை பண்ணைகளுக்கான நிறுவனங்கள் திறக்கப்படுவதாகவும் அதன் பெயரில் பண்ணைகள் உருவாக்கப்படுவதாகவும் இதனால் அந்த பிரதேசத்து கடற்றொழில் மக்களுக்கு தொழில் செய்யும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
முன்னர் கடற்றொழிலாளர்கள் தொழில் செய்த இடங்களில் பண்ணைகளை உருவாக்குவதன் ஊடாக, அந்த கடற்றொழிலாளர்களுக்கான பாரம்பரிய தொழில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது.
சீன நிறுவனங்களின் ஆதிக்கம்
இதன் காரணமாகவே பல்வேறு மீனவ சங்கங்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
இவை ஒருபுறமிருக்க, 5000 பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சுகளைக் கொடுக்கப்போவது யார் என்று பார்த்தால் அது யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே மையம்கொண்டுள்ள சீன நிறுவனம் ஒன்றே இந்த கடலட்டை குஞ்சுகளை விநியோகிக்கப்போகும் ஏக விநியோகஸ்தர்களாக இருக்கப்போகின்றனர்.
இந்த சீன நிறுவனம், கடலட்டை குஞ்சு பொரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உள்ளுர் கடற்றொழிலாளர்களுடன் பரிமாறிக்கொள்வதற்குத் தயாரில்லை.
அந்த தொழில்நுட்பம் ஏகபோக உரிமையாக சீனர்களின் வசமே இருக்கப்போகின்றது. இதனூடாக வடக்கில் சீனா நிரந்தரமாகக் காலூண்றும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகின்றது.
அது மாத்திரமல்லாமல் சீன நிறுவனம் தீர்மானிக்கும் விலைக்கே பண்ணையாளர்கள் கடலட்டைக் குஞ்சுகளை கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும்.
இந்த குஞ்சுகளின் மூலம் கிடைக்கப்பெறும் கடலட்டைகளை நாளை கொள்வனவு செய்யும் நிறுவனமாகவும் இதே சீனநிறுவனம்தான் திகழப்போகிறது.
இதனால் குஞ்சுகளை கொள்ளை இலாபத்திற்கு விற்று, குறைந்த விலையில் கடலட்டைகளைக் கொள்வனவு செய்து சீனா இரட்டிப்பு இலாபத்தினை அடையப்போகிறது.
மேலும், இந்தியாவுடன் மிக நீண்ட எல்லைத் தகராறுகளைக் கொண்டுள்ள சீனா, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் காலூண்றுவதினூடாக இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளுக்கும் பாதுகாப்புத் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
அதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கக்கூடாது என்பதை எமது அமைச்சரும் மீனவ சகோதரர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
பண்ணைத்திட்டங்கள் அமையக்கூடாது
எமது பாரம்பரிய மீன்பிடியைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வடக்கு மாகாண மக்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் இங்கிருந்து கிடைக்கக்கூடிய கடலுணவுகள் கிடைக்காமல் போவதற்கான வழிமுறையாக இந்தப் பண்ணைத்திட்டங்கள் அமைந்துவிடக்கூடாது என்பதை அமைச்சருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அதேபோன்று கடலட்டை குஞ்சுகளுக்கான ஏகபோக விநியோகத்தை சீன நிறுவனத்திடம் கையளித்து, முழு மீனவ சமுதாயமும் அவர்களில் தங்கியிருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதும் மிக மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும் என்பதையும் அமைச்சருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடலட்டைப் பண்ணை அமைக்கும் நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பிலும் ஏராளமான கரிசனைகளை உருவாக்கும்.
ஆகவே இவை அனைத்தையும் கவனத்திலெடுத்து அமைச்சர் செயற்படுவார் என்றும் செயற்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம் என அவ் ஊடக அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.