தேர்தல் வரும்போது தேர்தல் கூட்டணி தொடர்பில் முடிவு எடுப்போம்! சுரேஷ் பிரேமச்சந்திரன்
"மாகாண சபைத் தேர்தலை வைக்கச் சொல்லி அதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதுதான் இன்றைய காலகட்டத்தின் நோக்கம். தேர்தல் வருமோ, வராதோ தெரியாது. தேர்தல் வரும்போது தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும்" - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
தேசிய இனப் பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தமிழ் மக்களுக்கான கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் மூலம்தான் தமிழ் மக்களின் எதிர்காலத்தை சரியான பாதையில் திட்டமிட்டுக் கொண்டு செல்ல முடியும் என்ற பொதுவான கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
ஆகவே தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்களுடைய உரிமைகள் தொடர்பாக பேசக்கூடியவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு செல்வதன் ஊடாகத்தான் தமிழ் மக்களுடைய இருப்பைப் பாதுகாத்து அவர்களது கைகளில் அதிகாரம் பெறுவதற்கான ஏற்பாட்டைச் செய்ய முடியும் என்பதை நம்புகின்றோம்.
அந்த அடிப்படையில் முதலாவதாக கடந்த பல காலமாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதையும், அது உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதையும், அதற்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துவோம்.
தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் பல விடயங்களை நாங்கள் பேசி இருக்கின்றோம். அது பற்றி தொடர்ந்து கலந்துரையாடி எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பொதுவான விடயத்தை முன்னெடுப்பதாக யோசித்திருக்கின்றோம்.
வந்திருக்கக் கூடிய அரசாங்கம் கூட வெறுமனே வாயளவில் இல்லாமல் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஆக்கபூர்வமான விடயங்களைக் கொண்டு வர வேண்டும்.
தமிழ் மக்கள்
அதனை விடுத்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களைத் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்ற காரணத்துக்காக தாங்கள் விரும்பியவாறு செயற்படுவது என்பது ஏற்புடைய விடயம் அல்ல.
அந்தவகையில் தமிழ் மக்களுடைய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படையில் நாங்கள் ஒருமித்து பொது விடயங்களில் ஐக்கியப்பட்டுச் செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளோம்.
எங்களுடன் பேச முற்படுகின்ற ஏனைய தரப்புகளுடனும் இது தொடர்பாக நாங்கள் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம்.
மாகாண சபைத் தேர்தலை வைக்கச் சொல்லி அதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதுதான் இன்றைய காலகட்டத்தின் நோக்கம்.
தேர்தல் வருமோ, வராதோ தெரியாது. தமிழ் மக்கள் சார்பில் தேர்தலை வைக்குமாறு அழுத்தம் கொடுப்போம்.
மாகாண சபைத் தேர்தலை வையுங்கள் என்பது எமது நிலைப்பாடு. தேர்தல் வரும் போது தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
கஜேந்திரகுமார் தரப்புடன் ஏற்கனவே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி பேசி வருகின்றது. அதேவேளை, தமிழரசுக் கட்சியும் அவர்களுடன் பேச அழைப்பு விடுத்துள்ளது" - என குறிப்பிட்டுள்ளார்.