ரஷ்ய- உக்ரைன் போரில் இலங்கையர்கள்: ரஷ்யாவுக்கு புறப்படும் இலங்கையின் உயர்மட்டக்குழு
ரஷ்ய(Russia) - உக்ரைன் (Ukraine) மோதலின்போது, ரஷ்யாவுக்காக போரிட்டு வருவதாக கூறப்படும் இலங்கையின் ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, இலங்கை உயர்மட்டக் குழுவொன்று ரஷ்யாவுக்கு புறப்படுகிறது.
குறித்த குழுவானது, இன்று (24.06.2024) தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இந்தக் குழுவில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய (Tharaka Balasuriya), நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) மற்றும் காமினி வலேபொட (Gamini Waleboda), பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன (Kamal Gunaratne) மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
விசேட பேச்சுவார்த்தை
இந்நிலையில், தமது விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் ரஷ்ய வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதற்கமைய, இந்த பேச்சுவார்த்தைகள் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இந்தநிலையில், ரஷ்ய - உக்ரைன் போரில் ஓய்வு பெற்ற இலங்கை இராணுவத்தினரின் தொடர்பு குறித்து எந்த குறிப்பிட்ட தகவலும் இல்லை என வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
ரஷ்ய தனியுரிமைச் சட்டம்
அதேவேளை, ரஷ்ய அரசாங்கத்தால் வழங்கப்படாத இந்த தகவல்களுக்கு ரஷ்ய தனியுரிமைச் சட்டங்களே காரணம் என இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, போரில் உயிரிழந்த இலங்கையர்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கைகள் கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும், ரஷ்யாவிலிருந்து கிடைத்த உத்தியோகபூர்வ தகவல்களின்படி, 450இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ரஷ்ய ஆயுதப்படைகளில் இணைந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |