அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அனைத்துப் பல்கலைக்கழகங்களிலுள்ள கல்விசாரா ஊழியர்கள் ஆதரவு
அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளையதினம் வெள்ளிக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,
நாளை மே 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள வேலைநிறுத்தத்திற்கு அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டுக்குழுவானது பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களும் அதில் இணைந்து கொள்வதென்று தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.
நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சடுதியாக அதிகரித்துள்ள வாழ்க்கை செலவினை ஈடுசெய்ய முடியாத நிலையில் எமது நீண்டகால சம்பள முரண்பாடுகளை சீர்செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்படுவதை வெளிக்கொணருமுகமாகவும் பல்கலைக்கழகங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகளைக் கண்டித்தும் அனைத்துப் பல்கலைக்கழங்களிலுள்ள கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் 6.5.2022 ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



