வடக்கில் நீண்ட காலம் அபிவிருத்தி நடக்கவில்லை: அமைச்சர் சுனில் குமார கமகே குற்றச்சாட்டு
வடக்கில் நீண்ட காலம் அபிவிருத்தி நடக்கவில்லை, இங்கிருந்தவர்கள் வாக்குகளை பெற்று தங்கள் வேலைகளை செய்தார்கள் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டிய பின்னர் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமை
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கோரிக்கையால் இதனை நாம் செய்யவில்லை. நாமாக உணர்ந்து இதனை இன்று செய்துள்ளோம். அமைச்சராக நான் முதன்முதலாக பயணத்தை மேற்கொண்டது யாழ்ப்பாணத்துக்கு தான். அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திற்கு என்ன தேவை என தீர்மானித்தோம். என்னுடைய சொந்த மாவட்டம் காலி. அமைச்சராக இன்னமும் அந்த மாவட்டத்திற்கு போகவில்லை.
தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த நாம் முயற்சிக்கிறோம். எமக்கு அதிகாரம் தொலைவில் இருந்தபோதும் நாம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்தோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் என்பதல்ல மனிதராக ஒன்றாக இருக்க வேண்டும். பிமல் ரத்நாயக்க ஆயிரம் தடவை யாழ்ப்பாணத்துக்கு வந்திருப்பார். 2013 முதல் அவர் இங்கு வந்து செயற்படுகிறார்.
எனவே வாக்குகளுக்கவோ அரசியல் தந்திரத்துக்காகவோ இதனை நாம் செய்யவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் தனி செயற்றிட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அதிக நிதியாக உள்ளக விளையாட்டு அரங்கிற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

நிதி ஒதுக்கீடு
2025ம் ஆண்டுக்கான நிதியில் 170 மில்லியன் ரூபாயும் 2026ம் ஆண்டுக்கான நிதியில் 200 மில்லியனும் இந்த உள்ளக விளையாட்டு அரங்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வலைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கபடி, மேசைப்பந்து, கரம், மார்ஷல் ஆர்ட் என பல விளையாட்டுகளை இங்கு விளையாட முடியும். விளையாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம், யாழ்ப்பாணம், காலி என நாம் பார்ப்பதில்லை. திறமையான பிள்ளைகளை பார்க்கிறோம்.
இங்கு பல திறமையானவர்கள் உள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பல வருடங்களாக பயன்பாடில்லாமல் நீச்சல் தடாகம் உள்ளது. அதற்காக 30 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்லோரும் பாவிக்கும் வகையில் அது அமைந்தால் அது பயனாக இருக்கும்.
தங்க விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்.. சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாபா வங்காவின் தகவல்
மாணவர்களுக்கு உடற்பயிற்சி பெரியோருக்கு நடைபயிற்சி செய்ய சிறுவர் பூங்கா தேவை. யாழ் மாவட்ட செயலாளர் இடத்தை வழங்கினால் நல்ல பூங்காவை அமைக்க முடியும். சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குப் பின் இதன் முன்னேற்றத்தை பார்க்க வருவோம். அந்த நேரத்தில் என்னென்ன தேவை என்பதை ஆராய்வோம். யாழ். மாவட்டத்தில் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு துறை சார்ந்து பல வேலைத்திட்டங்களை நாம் செய்வோம் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |