அவதானமாக இருங்கள்..! வடக்கு - கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 25.11. 2025 வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் நாட்கள் இலங்கையினுடைய வானிலையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியாக கருதப்படுகின்றது.
மிகக் கனமான மழையைப் பெறும் வாய்ப்பு
தற்பொழுது இலங்கைக்கு தெற்காக குறிப்பாக இலங்கையிலிருந்து தென் மேற்காக 62 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படுகின்ற வளிமண்டல மேலெடுக்க சுழற்சியானது தொடர்ந்து மேற்கு திசை நோக்கி நகர்ந்து, காலியில் இருந்து மேற்கு வடமேற்கு திசையில் அரபிக்கடலில் 161 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டு பின்னர் எதிர்வரும் 26.12.2025 அன்று மீள ஒரு காற்று சுழற்சியாக வலுப்பெற்று கிழக்கு திசை நோக்கி நகரும் என மாதிரிகள் காட்டுகின்றன.

அத்தோடு இந்த காற்று சுழற்சி தொடர்ச்சியாக வலுப்பெற்று இலங்கையின் கிழக்கு மாகாண கரையூடாக வடக்கு நோக்கி நகர்ந்து கிழக்கு மாகாண கரைகளை அண்மைக்கும் பொழுது ஒரு சிறு புயலாக வலுப்பெற்று வடக்கு நோக்கி நகரும் என மாதிரிகள் காட்டுகின்றன.
பொதுவாக அயனப்பிரதேசத்தில் நிகழும் தாழமுக்க நிகழ்வுகள் மேற்குத் திசை நோக்கி நகர்வதே வழமை.
மிக அரிதாகவே அவை கிழக்கு நோக்கி நகரும். அந்த வகையில் இந்த காற்றுச் சுழற்சி மிக முக்கியமான ஒரு வானிலை தோற்றப்பாடாகும்.
இது கிழக்கு நோக்கி நகர்ந்து மீண்டும் இலங்கையின் தென் பகுதியை அண்மிக்கும் போது இலங்கையின் தென் மாகாணம், மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மேல் மாகாணம், ஊவா மாகாணம் என்பனவும், பின்னர் இலங்கையின் தெற்குப் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி நகரும்போது ஊவா, கிழக்கு, மத்திய, வடமேற்கு, வடக்கு மாகாணங்கள் என்பனவும், கனமழை முதல் மிகக் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு இலங்கைக்கு
குறிப்பாக நாளை அதாவது 25 ஆம் திகதியிலிருந்து தென் மாகாணம், மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மேல் மாகாணம், ஊவா மாகாணம் என்பனவும் எதிர்வரும் 27.11.2025 இலிருந்து கிழக்கு, வடக்கு, வட மத்திய மாகாணங்களும் பரவலாக கனமழை முதல் மிகக் கனமழை வரை பெறும் வாய்ப்புள்ளது.

அதேவேளை ஏற்கனவே நேற்றைய தினம் இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாநிலத்திற்கு அருகில் தோற்றம் பெற்ற தாழமுக்கம் எதிர்வரும் 26.11.2025 அன்று புயலாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவும் வளிமண்டல நிலைமைகள் மற்றும் ஏனைய புற காரணிகளின் விளைவாக இதன் நகர்வில் பல பின்னடைவுகள் காணப்படுகின்றன.
எதிர்வரும் 25.11.2025 முதல் 29.11.2025 வரை இலங்கைக்கு வானிலை ரீதியாக மிக சவாலான காலப்பகுதியாகும். ஏனெனில் எதிர்வரும் 26.11.2025 அன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு இலங்கைக்கு நெருக்கடியைத் தரக் கூடிய இரண்டு தாழமுக்கங்கள் வங்காள விரிகுடாவில் நிலவும்.
கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில்
குறிப்பாக எதிர்வரும் 29.11.2025 அன்று இந்த இரண்டு தாழமுக்க நிகழ்வுகளினதும் மைய அமுக்க அளவும் வெளி வலய அமுக்க அளவும் ஒரே நிலைமையில் காணப்படும் என மாதிரிகள் கட்டுகின்றன.
இந்த மாதிரிகளின் அடிப்படையிலேயே நிகழ்நேர வானிலையும் அமைந்தால் இலங்கை முழுவதற்கும் இது பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

எதிர்வரும் 25.11.2025 முதல் தெற்கு, மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாண மக்களும் 27.11.2025 முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாண மக்களும் பெருமழை மற்றும் வெள்ளம், வேகமான காற்று வீசுகை தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
அதேவேளை தெற்கு (23,24,25,26,2728 ம் திகதிகள்), மேற்கு ( 23,24,25,26,27,28,29 ம் திகதிகள்), கிழக்கு ( 25,26,27,28,29,30 ம் திகதிகள்) வடக்கு( 26.27.28.29.30 ம் திகதிகள்) கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam