நீதிமன்ற உத்தரவை மீறிய இருவருக்கு அழைப்பாணை - பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றத்தை அவதூறுக்குட்படுத்தும் வகையிலும், நீதிமன்றத்தின் இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்தும் விதத்திலும் நீதிமன்றம் வழங்கிய கட்டளையை மீறிச் செயற்பட்ட இரண்டு எதிர்மனுதாரர்களை மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(11.11.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுதே நீதவான் இந்துகா சிவலிங்கம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் பேராசிரியர் சி.ரகுராம் தாக்கல் செய்த வழக்கில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளையை மீறும் வகையில் செயற்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
அத்துடன், குறித்த கட்டளையை பிறப்பித்த நீதிமன்றத்தின் இறையாண்மை தொடர்பில் அவதூறாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட இருவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியர் சி.ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் மற்றும் பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளையிட்டிருந்தது.
அதனை மீறிச் செயற்பட்ட இரண்டு எதிர் மனுதாரர்களுக்கு எதிராகப் பிறிதாகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவதூறு வழக்கில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.