மட்டக்களப்பில் மைதானக் காணி சர்ச்சை – எதிர்ப்பை வெளிப்படுத்திய பொதுமக்கள்
மட்டக்களப்பு - திருப்பெருந்துறை பகுதியில் விளையாட்டு மைதானக் காணியைத் தனது காணி எனக் கூறி வேலி அமைக்க முயன்ற ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அப்பகுதி மக்களால் தடுத்து விரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது, குறித்த பகுதியில் வீதி ஓரத்தில் அமைந்திருக்கும் தனியாருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் வெற்றுக் காணி ஒன்றில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக யாரும் உரிமை கோராத நிலையில் அந்த பகுதி இளைஞர்கள் அதனை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி அதில் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் காணி என எழுத்து மூலமான கடிதம்
இந்த நிலையில் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியான 14 பேச் காணியை காணி உரிமையாளரிடம் இருந்து விலைக்கு வாங்கியதாக தெரிவித்து காணியை கையப்படுத்த வேலி நாட்டுவதற்கு கட்டைகள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கு ஒன்றுகூடிய கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அவரை அந்த இடத்திலிருந்து வெளியேறச் செய்துள்ளனர்.

இது மட்டுமல்ல கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இந்தக் காணி விவகாரம் தொடர்பில் கிராம மக்கள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் மீண்டும் இந்த காணியை கையகப்படுத்த இவர் எத்தனிக்கிறார். எனவே பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் இந்த பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இவர் காணியை கையகப்படுத்த முயற்சிக்கின்றதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என பிரதேச வாசிகள் தெரிவித்து அவரை வேலி நாட்ட விடாது தடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி, இது தனியார் காணி தன்னிடம் இதற்கான பட வரைவு, உறுதி உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதாகவும் பிரதேச செயலாளர் இது தனியார் காணி என எழுத்து மூலமான கடிதம் தந்துள்ளதாகவும் அதன் பிரதிகள் கிராம உத்தியோகத்தரிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



