மைத்திரி தரப்பில் இருந்து வெளியேறிய முக்கிய உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோர் விலகியுள்ளனர்.
இருவரும் தமது பதவி விலகல் கடிதங்களை தமக்கு அனுப்பி வைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.
பொதுச் செயலாளர் பதவி
இதன்படி புதிய கூட்டணி ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.
எனினும், அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதன் காரணமாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், அமைச்சர் மஹிந்த அமரவீர அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததுடன், இரு பொதுச் செயலாளர்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இதன்படி வெற்றிலை சின்னத்துடன் கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பெயரை புதிய கூட்டணிக்கு பயன்படுத்தினால் இருவரும் வெளியேறி புதிய செயலாளரை நியமிக்க வேண்டும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |