விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்த சுமந்திரன்
நான் மூளையை உபயோகித்துச் செயற்படுகின்றேன் என்று விக்னேஸ்வரன் எம்.பி. (C. V. Vigneswaran) கூறியமைக்கு முதலில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
என்னுடைய அற்புதமான மாணவன் சுமந்திரனுக்குப் பல்வேறு தகைமைகள் இருந்தாலும் அவருக்குத் தமிழ்த் தேசிய உணர்வு இல்லை. அவர் மூளையை மாத்திரம் பாவித்துச் செயற்படுகின்றார்' - என்று விக்னேஸ்வரன் எம்.பி. அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த சுமந்திரன் எம்.பியிடம் விக்னேஸ்வரன் எம்.பியின் கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
விக்னேஸ்வரன் கூறும் விடயங்கள்
மேலும் தெரிவிக்கையில், "விக்னேஸ்வரன் சொல்லுகின்ற விடயங்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. ஆனால், என்னுடைய மூளையை உபயோகித்து நான் சிந்திக்கின்றேன் என்று அவர் கூறியமைக்கு என்னுடைய நன்றியை அவருக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஒரு ஆசிரியனாக தன்னுடைய மாணவர்கள் மூளையைத்தான் பாவித்துச் சிந்தித்துக் கூறுகின்றனர் என்று அவர் கண்டுபிடித்திருக்கின்ற கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமானது.
ஆனால், அவர் எதனைப் பாவித்துச் சிந்திக்கின்றார் என்று எனக்குத் தெரியவில்லை" என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |