தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்காக காத்திருக்கும் சுமந்திரன் - சாணக்கியன்
தமிழ் பொதுவேட்பாளர் என்பது அனாவசியம் என சுமந்திரனும் - சாணக்கியனும் சூளுரைத்து வரும் வேளையில் சிங்கள தலைமைகளில் ஒருவருக்கு ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின்னரே எங்களது நிலைப்பாடும் வெளிவரும் என்பது அவர்களின் கருத்து.
இதில் முக்கியமான விடயம் என்ன என்றால், தங்கள் கூறும் தலைமையையே வடக்கு - கிழக்கு மக்கள் ஏற்பார்கள் என மார்தட்டி கொள்ளும் கருத்துக்கள்.
தற்போது தமிழரசு கட்சியின் கொள்கைகள் எது என்பதே மக்களின் கேள்வி?
பொதுவேட்பாளர்
தமிழரசு கட்சியின் பிரதான உறுப்பினரான அரியநேத்திரன் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
அவருக்கான ஆதரவு சிறீதரனால் பொன்னாடை வழங்கி வெளிப்படுத்தப்பட்டது.
மாவை சேனாதிராஜாவும் அரியநேத்திரனுடனே கைகோர்த்துள்ளார்.
ஆனால் சுமந்திரனும் சாணக்கியனும் அவரை எதிர்க்கின்றனர். கலையரசன் எம்.பி மக்கள் கருத்துக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்கிறார்.
தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தேர்தல் புறக்கணிப்பு என்பதே வருங்கால அரசியலில் கிடையாது என்கிறார்.
தமிழரசுக் கட்சி
இவற்றை அடிப்படையாக வைத்து நோக்கினால் தமிழரசுக் கட்சி என்பது யாரை மையப்படுத்தி செயற்படுகிறது? அதனை நிர்வகிப்பது யார்?
தமிழரசுக் கட்சிக்குள் பிளவு என வெளிவரும் கருத்துக்கள் உண்மை இல்லை என கூறும் கட்சி தலைமைகள் மத்தியில், இணக்கப்பாடு என்ற ஒரு விடயத்தை இதுவரையில் எட்டப்படாமை எதனை பிரதிபலிக்கிறது.
காணி அதிகாரம் உண்டு பொலிஸ் அதிகாரம் இல்லை என்பது ரணிலின் நிலைப்பாடு.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவேன் என்பது சஜித்தின் கருத்து.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமென என மேடைகளில் வெளிப்படுத்துவது அநுரவின் உறுதி.
கோட்டாபய - நாமல்
ஆனால் கோட்டாபயவை போல் தமிழருக்கு ஒன்றுமே கிடையாது என்பது இளம் வேட்பாளர் நாமலின் வெளிப்பாடு.
இதில் 2019பதில் ஆட்சியை கைப்பற்றிய ராஜபக்சர்களை போல் சிங்கள மக்களின் வாக்குகளை கைப்பற்ற நாமல் மறைமுகமாக காய் நகர்த்துவது வெளிப்படுகிறது.
இவ்வாறிருக்க எவரையும் ஆதரிப்பதாக தமிழரசுக் கட்சி இதுவரை முடிவெடுக்கவில்லையென்று கருத்து கூறும் சுமந்திரன், சிங்கள தலைமையை ஆதரிக்க போகின்றாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதன் பின்னணியிலேயே நேற்று தனியார் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் மூலமாக, எதையும் சாதிக்க முடியாது என கூறியுள்ளார்.
இதன்போது சுமந்திரன் கருத்து பின்வருமாறு அமைந்திருந்தது.
வாக்குப்பலம்
''இவ்வாறான முயற்சிகள், இருக்கக் கூடிய அரசியல் பலத்தை சிதைத்து விடக்கூடியதாகவே இருக்கும். எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருப்பவர்களின் வாக்குப்பலம் எப்போதும் பலனளிக்காது.
ஆனால், பிரதான வேட்பாளர்கள் 03 பிரிவுகளாக பிரிந்திருக்கின்ற போது, அந்த வாக்குப்பலம் மிகவும் பெரிதாக தோற்றமளிக்கும்.
இதுவும் அவ்வாறானதொரு தருணம்தான். எங்களுடைய வாக்குப்பலம் வழமைக்கு மாறாக மிகவும் பலமுள்ளதாக வரும் சந்தர்ப்பத்தில்,புறக்கணிப்பது அல்லது வெல்ல முடியாதெனத் தெரிந்துள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது என்பவை,கிடைத்துள்ள அரசியல் ஆயுதத்தை உபயோகிக்காமல் விடுவதற்கு ஒப்பானது." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |