ஜனாதிபதி தேர்தலில் அரியநேத்திரனுக்கு கிடைக்கவுள்ள வாக்குகள்: முன்னாள் எம்.பியின் நம்பிக்கை
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேத்திரனுக்கு (Ariyanethran) வடக்குக் கிழக்கில் உள்ள 12 இலட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வவுனியாவை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (25.08.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த எட்டு ஆண்டுகளாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தென்னிலங்கையைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
தேர்தல் பிரசாரம்
தமிழ் மக்கள் காட்டிய அந்த நல்லிணக்க செய்தியை ஆட்சியில் இருந்த எந்த ஜனாதிபதிகளும் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வையோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை பிரச்சனையோ இதுவரை காலமும் தீர்க்கவில்லை.
ஆகவே, அந்த அடிப்படையிலே நாங்கள் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே இருக்கக் கூடிய மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாகும்.
இதற்கான தேர்தல் பிரசாரம் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றது. வடக்குக் கிழக்கில் 12 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் உள்ளார்கள்.
அதில் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறுவதற்கான பணிகளை நாங்கள் ஆரம்பித்து இருக்கின்றோம். நிச்சயமாக இந்த தேர்தலிலே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு மற்றும் அரசியல் ரீதியான மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
சர்வதேச நாடுகள்
இதில் 50 வீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். உண்மையில் நீண்ட காலமாக தமிழ் மக்களுக்கு ஒரு தேசிய இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றது.
இதுவரை காலமும் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதிகள் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையை தீர்க்கவில்லை என்கின்ற ஒரு செய்தியை நாங்கள் சொல்ல முனைகிறோம்.
இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் வரைக்கும் தெற்கில் இருக்கின்ற எந்த ஒரு சிங்கள வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற செய்தியையும் கூறுகின்றோம்.
அடுத்து சர்வதேசம் இந்த யுத்தத்தை முடிக்கும் வரையும் பல நாடுகளின் உதவியை பெற்று இந்த யுத்தத்தை முடித்து வைத்தது. யுத்தம் முடிந்த பிற்பாடு தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்த சர்வதேச நாடுகள் உறுதியளித்திருந்தன.
தேசிய இன பிரச்சினை
யுத்தம் முடிந்து 15 ஆண்டு காலமாக இருக்கின்றது. ஆனால் சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
இலங்கை அரசாங்கமும் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆகவே, தமிழ் மக்களுக்கு ஒரு தேசிய இன பிரச்சனை ஒன்று இருக்கின்றது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. ஒரு புதிய அரசியல் மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி வர்த்தக பிரமுகர்கள் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் சிவில் அமைப்புகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |