தமிழரசுக்கட்சியின் குழப்பநிலைக்கு சுமந்திரனே காரணம்: எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு குழப்பக்காரர் எனவும் தமிழ் அரசியலில் அவரது இருப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
“சுமந்திரன் எங்கு சென்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தி மகிழ்வதோடு அதற்கு ஆதாரமாக சில விடயங்களை குறிப்பிடலாம். அவரால் வடக்கு மாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டதோடு, சீ.வி.கே.சிவஞானத்தை கையாண்டு விக்னேஸ்வரனை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்தார்.
விலகிய கட்சிகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சமீபத்தில் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய அனைத்து கட்சிகளும் வெளியேறியது.
இந்தக் கட்சிகளின் விலகல் தீர்மானத்துக்கு காரணம் சுமந்திரனின் தலையீடே ஆகும். திருகோணமலையில் தமிழரசுக்கட்சியில் ஏற்பட்ட குழப்பநிலைக்கும் அவர் தான் காரணம்.
அத்துடன், சுமந்திரனின் தலையீட்டினால் 20க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைக் கொண்டிருந்த லண்டன் GTF அமைப்பானது மூன்று தனிநபர்களாக குறைக்கப்பட்டது.
தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதற்காக 2009ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கனடிய தமிழ் காங்கிரஸ் சுமந்திரனின் தலையீட்டின் பின்னர் இலங்கைக்கு ஆதரவாக சாய்வடைய ஆரம்பித்தது.
ஊழல் விவகாரங்கள்
சுமந்திரன் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஊழல் விவகாரங்களை மறைக்க முற்பட்ட போது அங்கும் அவரால் குழப்பநிலை தோன்றியது.
இதனால், அமெரிக்க மிஷனின் நிதி உதவி குறைக்கப்பட்டது. இந்த ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான விரிவான நிர்வாக சீர்திருத்தங்கள் கோரப்பட்ட போதிலும் அவை அனுமதிக்கப்படவில்லை.
துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்க மிஷன் அவரது முன்மொழிவுகளை நிராகரித்தது. இவை மட்டுமன்றி அவரால் விளைவிக்கப்பட்ட குழப்பங்களை நாம் இன்னும் பட்டியிலிடலாம்.
ஏன் தமிழரசுக்கட்சி தமிழ் அரசியலில் சுமந்திரனை விரும்புகிறார்கள் என்று கேட்க விரும்புகிறோம். அவரால் கடந்த 15 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றவர்களின் கருத்துக்களை பொருட்படுத்தாமலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர் இறையாண்மை
இதனால், ஜனநாயக அரசியலில் அவரது இருப்பு கேள்விக்குறியாகியுள்ளதோடு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் அரசியல் அதிகாரம் இல்லாத நிலை தொடர்கிறது.
தமிழரசுக் கட்சியில் இருந்து சுமந்திரனை நீக்கினால், உலக அரங்கில் தமிழர்களுக்கு அவர் முன்வைத்துள்ள எதிர்மறையான பிம்பம் இல்லாது அவர் ஏற்படுத்திய குழப்பம் தீரும்.
தமிழர் இறையாண்மையை அடைவதை இலக்காகக் கொண்ட ஒரே கொள்கையின் கீழ் குழப்பங்கள் இன்றி ஒன்றிணைய முடியும் என கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |