தமிழரசுக் கட்சியை சுமந்திரனால் காப்பாற்ற முடியுமா
இரட்டை இலைச் சின்னப் பிரச்சினையில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் இழுபறிபட்டு நீதிமன்றத்தினை நாடி கட்சியின் செயல்வலுலை சீர்குலைத்த ஒரு நிலையையே இன்றைய தமிழரசுக்கட்சியும் அடைந்திருக்கின்றது.
இருசம்பவங்களினதும் பின்னணிகள் மற்றும் அணுகுமுறைகள் வேறு வேறு விதமாக இருந்தாலும் இரு சம்பவங்களாலும் கட்சிக்கு விளையும் விடயம் ஒன்றாகத்தான் இருக்கும்.
சுமந்திரனது அரசியல் பிரவேசமானது தேர்தல் வியாபாரத்தில் ஈடுபடாத புத்திசாலிகளை உள்வாங்க என அரசியலமைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு கதவான தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற வாழ்க்கைக்குள் நுழைக்கப்படுகின்றார்.
தமிழ் தேசிய அரசியல்
அவர் ஒரு புத்திசாலியாக நிபுணத்துவ மேற்சட்டையுடன் அடையாளப்படுத்தப்பட்டு ஒரு புலமை வளமாக தமிழ் தேசிய அரசியலில் காண்பிக்கப்பட்டார்.
அடுத்த பொதுத் தேர்தலில் தான் நேரடியாக அரசியல் ஈடுபட்டு வெற்றியீட்ட வேண்டும் என்ற தீர்மானத்தில் தேர்தல் வியாபாரத்தில் உள்நுழைகின்றார்.
இது ஒரு முரண்நிலை அணுகுமுறை என்பதை அன்றைய கால காட்டத்தில் பெருந்தலைவர் என விளிக்கப்படும் சம்பந்தரோ கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவோ கட்டுப்படுத்தும் தேவை அற்றவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
காரணம் அன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் பெயரில் வீட்டு சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பிச்சைக் கோப்பைக்குள் தான் அனைத்து வேட்பாளர்களும் வாக்குக்களை உண்டுகொண்டிருந்தார்கள்.
வெற்றி என்பது உறுதி என்பதைவிட தமிழ் அரசுக்கட்சிக்காரருக்கு தோல்வி மீதான பயமோ அழுத்தமோ உள்ளூர இருக்கவில்லை.
இத்தோல்வி மற்றும் அழுத்தம் என்னவோ அக் கூட்டமைப்பில் இருந்த கஜேந்திரகுமார், சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோருக்கே இருந்தது. அந்த காலகட்டத்தில் இவ்இருவரைத் தவிரவும் வேறுயாரும் சுமந்திரனது செயற்பாடுகளை விமர்சிக்கவில்லை.
காரணம் இவர்கள் இருவருக்கும் மிகத் தெளிவாக தெரியும் வெளியேறவேண்டியவாக்கு நிலை ஒன்று உருவாகுமிடத்து நாடாளுமன்ற உறுப்புரிமையில் தங்களுக்குரிய இடம் அங்கே கிடைக்காது.
சுமந்திரன் அரசியல் வியாபாரம்
இவ்வாறானதொரு சூத்திரமே அன்றைய களச்சூழல் ஆகும். அதற்காகவே கஜேந்திரகுமாரும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் கூவினார்களே அன்றி தமிழ் மக்களுக்காக கூவவில்லை என்பதை இன்றுவரைக்குமாக அனுபவச் சூழல் புடம்போட்டு நிற்கின்றது.
புலமையாளன் என்ற கதவில் உள்வந்து போட்டியாளன் ஆக மாறிய சுமந்திரன் அரசியல் வியாபாரத்தில் நுழைந்ததில் இருந்து இந்த கட்சியின் தலைமைப் பதவி என்பதற்கு மிகத் தெளிவாக அண்ணளவாக 10 வருடங்களுக்கு முன்னரே திட்டமிட்டுவிட்டார்.
அதற்கு உகந்தவகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பாக இருந்த காலத்திலும் பிற்காலத்திலும் தனக்கு இடையூறுகள் எனக் கருதியவற்றை மிகவும் சாமர்த்தியமாக சம்மந்தர் என்ற நிழலையும் மாவை சேனாதிராஜா என்ற கழன்ற கத்திப்பிடி போன்ற தலைவரையும் அவ்வப்போது தட்டி தட்டி வெட்டுவதுபோல் பாவித்து தெளிவாக முன்னகர்த்தியிருந்தார்.
ஒரு கட்டத்தில் சுமந்திரனது நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு பாதிப்பு, கட்சிக்கு பாதிப்பு என்பவற்றைக் கடந்து சுமந்திரனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு வெற்றியாகவே அமைந்திருந்தது.
இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் ஒரு உட்கட்சி ஜனநாயகமும், தமிழ் தேசிய உணர்வு ரத்தங்களும் கொதிக்காது அப்பா திரைப்படத்தில் வரும் தம்பிராமையா கதாபாத்திரம் போல என்ன நடந்தாலும் நமக்கு என்ன என கடந்து சென்றவர்களுள்தான் இன்றைய அனைவரும் அடங்குகின்றார்கள்.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் கட்சிகளின் பிரிவு வேட்பாளர்களின் நிலை முதலியவற்றைக் கருத்திற்கொண்டும் தேர்தல் வியாபாரத்தில் தமிழரசுக் கட்சிக்கு தலைவர் ஆகவேண்டும் என்ற தனது தீர்மானத்திற்கு சுருதி சேர்க்க வேண்டும் என்றால் சுமந்திரன் நேரடியாக அதிகூடிய வாக்குக்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த முடிவானது என்ன தேவைக்காக தேசியப்பட்டியல் ஆசனத்தில் உள்வாங்கப்பட்டாரோ அப்போது அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட நிபுணத்துவப் புனிதத்தினை இழந்துவிட்டார்.
அச்சிந்தனையில்தான் கடந்த இரு தேர்தல்களிலும் வேட்பாளர்களும் வடிவகைப்படுகின்றார்கள். வெற்றி வேட்பாளர்களைவிட தோல்வி வேட்பாளர்கள் மிகத் தெளிவாக உள்ளடக்கப்படுகின்றார்கள்.
சித்தாந்த அரசியல்
மிகவும் கவலைக்கும் வெட்கத்திற்கும் உரியதொரு விடயம் சமபந்தி,போசனம் என சாதியத்தை ஒறுத்த தமிழ் கட்சிகளும் இயக்கங்களுக்கும் இணைந்து தேர்தலை சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்மைப்பிற்குள் இன்றைய நிலையில் மகாசபைக்கு இத்தனை ஆசனங்கள் ஒதுக்க வேண்டும் என சாதிய ஒறுப்பால் கௌரவம் பெற்ற சமூகங்களோ மீளவும் இந்த ஒதுக்கத்தினை கோரிப்பெற்றுக்கொள்கின்றார்கள்.
இந்த இடத்தினையும் கடந்த தேர்தலில் மிகச் சிறப்பாக வடிவமைத்து வேட்பாளர்களையும் இட்டு நியாயப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே இருவேறு சித்தாந்த அரசியல் தளங்களை அடிப்படையாக கொண்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தான் சுமந்திரனும் சிறீதரனும் செயற்பட்டிருந்தனர்.
இந்த அடிப்படை வேறுபாட்டுக்கு மூலகாரணம் கட்சியின் யாப்பு, நிலைப்பாடு, செயற்பாட்டு ஒழுக்கம் முதலிய விடயங்கள் எவையும் கிஞ்சித்தேனும் இன்றைய கால ஓட்டத்திற்கு பொருத்தமான வகையில் தமிழரசுக் கட்சியிடம் இல்லை.
குறைந்த பட்சம் மரபு ரீதியான செயற்பாடுகளை மதிக்கத் தயாராகவும் இருக்கவில்லை.
அடுத்த தலைவருக்கான தகுதி என தமக்குள் தகுதியேற்றம் செய்யவேண்டிய சூழலில் தான் இரு சித்தாந்த தளங்களும் சுமந்திரனும் சிறீதரனும் ஒன்றாக வாக்கு சேகரிக்கின்றார்கள்.
இருவரும் நேரடியாக வெல்லவைக்கப்படுகின்றார்கள். சுமந்திரன் வென்றாலும் அவரது இறுதி இலக்கு (அல்ரிமேட் கோல்) அடையப்படவில்லை.
இந்த சூழ்நிலையிலேயே உட்கட்சி ஜனநாயகம் என்ற விடய வாதப்பொருள் மிகவும் கலவீனமான யாப்பு உடைய தமிழ் அரசுக் கட்சிக்குள் கருத்தரிக்கின்றது. அது நாளடைவில் வெளிவந்து இயன்றவரை கணிசமான பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.
தனியே கிளிநொச்சி மண் என்ற பௌதீக பிரிப்பை முழுக்கட்டுப்பாட்டில் அதாவது தமிழரசுக் கட்சிக்குள் மாற்று அணிகள் இன்றி தனக்குரிய தனி அணியாகவே மாத்திரம் சிறீதரன் பேணிவந்திருந்தார்.
இத் தேர்தல் உத்தியில் ஏற்கனவே கடந்த இரு தேர்தல்களிலும் தக்கவைத்திருந்த தங்களுக்கான பாரம்பரிய வாக்காளர்கள் பலரை மாவை சேனாதிராஜா, சரவணபவன், சித்தார்த்தன், சிறீதரன் ஆகியோர் இழந்திருந்தார்கள்.
இவற்றில் கணிசமான ஊடுருவல்களும் உடைப்புக்களும் சுமந்திரனால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் அவர் வென்றிருந்தார். அவர் உட்கட்சி தேர்தலில் வாக்கு விகிதாசாரத்தில் ஏனையவர்களை விடவும் முன்னேறியிருந்தார்.
இதற்காக பல பதவி அமர்த்துகைகள் மற்றும் கட்சிக்குள் முக்கியத்துவங்கள் முதலியன வழங்கப்பட்டிருந்தன.
உட்கட்சி ஜனநாயகம்
இச்சந்தர்ப்பத்தில் நேரடியாக அரசியல் வியாபாரத்தில் தோற்ற அம்பாறை கலையரசன் தேசியப்பட்டியலால் உள்வாங்கப்படுகின்றார். மக்களால் வெல்ல வைக்கப்பட முடியாத ஒருவர் உட்கட்சி ஜனநாயகத்தால் வெல்லவைக்கபடுகின்றார்.
இவ்வாறான தீர்மானம் மிக்க முடிவுகள் எடுக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மத்திய குழுவோ பொதுச் சபையின் நியாயமோ அறியப்பட்ட வரலாறு எட்டவில்லை.
இதனை சவாலுக்கு உட்படுத்த எந்தவொரு கட்சியின் நியாயத்தினை காக்கும் இன்றைய காவலர்களுக்கும் திராணி இருக்கவில்லை, முக்கியமாக அவர்களுக்கு அவ்வாறான தேவையும் அந்தச் சந்தர்ப்பத்தில் இருக்கவில்லை.
மிகச் சிறப்பான நிலை தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு உருவாகின்றது. இதனால் தான் இவரை கழன்ற கத்திப்பிடி என விளிக்கவேண்டியதாயிற்று. தனது இறுதி இலக்கினை சுமந்திரன் அடையமுடியாது விட்டதால் மாவை சேனாதிராஜா நாடாளுமன்றம் வந்துவிட்டால் தொடர்ந்தும் வாழ்நாள் தலைவராக தமிழரசுக் கட்சிக்கு அமர்ந்துவிடுவாரோ என்றதொரு முன்னேற்பாடுதான் அன்றைய செயலாளருடன் சேர்ந்து சம்பந்தரின் நிழலில் சுமந்திரன் கலையரசனுக்கு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பிச்சை.
அதுவரை தமிழ் தேசிய இரத்தம் கொதித்துக்கொண்டிருந்த கலையரசன் மென்வலு மிதவாத அரசியல் மாத்திரைகளை விழுங்கியதும் தமிழ்த் தேசிய அழுத்தத்தினை சீர்செய்துகொண்டார்.
இறுதி இலக்கில் சுமந்திரன் தெளிவாக பயணித்து அனைத்தினையும் தனக்கு சாதகமாக வடிவமைத்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் புதிய தலைவர் தேர்வு 2024 வருகின்றது. இச் சம்பவங்கள் அனைவரும் அறிந்த விடயங்கள், இதன் தொடர்சியில் தலைவர் பதவி என்பதைத் தாண்டி காத்திரமான நிர்வாக பணிகள் செயலாளருக்கு உரியவை.
அந்த பதவியில் இருப்பவர் சுயாதீனமாக செயற்படுவாராயின் அவர் தான் ஏனையவர்களின் குறிப்பாக தலைவரதும் தலையெழுத்தை தீர்மானிக்கவல்லவராவார். இந்த சூழ்நிலையிலேயே குகதாசன் என்ற கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகின்றது.
கனேடிய மண்ணில் மிகவும் உன்னத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த குகதாசன் கனேடிய காங்கிரசின் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தார். கனேடிய காங்கிரஸ் ஆனது விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் 2000ம் ஆண்டளவில் கனடாவில் ஒரு இலாகநோக்கற்ற அறக்கட்டளை அமைப்பாக உருவாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் அங்கே ஏற்பட்ட விரிசல்கள் விடுதலைப் புலிகளுடைய நிலைப்பாட்டிற்கு இடைவெளியுடையதாக பேணப்பட்டு வந்தது.
விடுதலைப் புலிகள் காலத்தில் கனேடிய காங்கிரஸ் கனடா மண்ணை மாத்திரமே கவனம்கொண்டது. விடுதலைப்புலிகளின் நீக்கத்திற்கு பின்னராக இலங்கைத் தமிழ் அரசியலில் வடக்கு கிழக்கை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக கனடா காங்கிரஸ் உருவெடுக்க ஆரம்பிக்கின்றது.
மன்னரதும் மந்திரியினதும் முடிவு
இதன் வளர்சியை கடந்த மூன்று பொதுத் தேர்தலிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் விளைந்த விளைவுகளை வைத்துக்கொண்டு எடைபோட்டிட முடியும்.
ஒரு வாக்காளரது குழப்பத்திற்கும் துப்பாக்கி சுடுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட ஜனநாயகத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரிவு எவ்வித ஜனநாயகமும் அற்ற முறையில் பல வியாக்கியானங்கள் கற்பிக்கபட்டு தேர்தலில் போட்டியிட்டு வெல்வைக்கப்படுவார்கள்.
ஜனநாயகமான தேர்தல் முறமை, எதேச்சாதிகாரமான வேட்பாளர் தெரிவு இதுதான் கடந்தகால வரலாறு. இது ஒரு செயற்கையான அரசியல் சூழல் உருவாக்கம் ஆகும். அதனை பின்னின்று பணம் என்றதொரு விடயத்தினால் சாதிப்பதில் முன்னிலை வகிப்பது கனடா காங்கிரஸே ஆகும்.
இப்பணத்தில் கையளைந்த வேட்பாளர்கள் தோற்றாலும் தோற்கடிக்கப்பட்டாலும் வாய்திறக்க மாட்டார்கள். இது கட்சித் தலைவரான கழன்ற கத்திப்பிடி மாவை சேனாதிராஜாவுக்கும் பொருத்தமானதாகும். இவ்வாறு கிடக்கும் நிதிகள் எவையும் சட்டரீதியாக கட்சிக்கு கிடைக்கப்பெறுவதில்லை.
அங்கத்துவ கட்டணக் கணக்கினை சீர்செய்வது மாத்திரமே கட்சிப் பொருளாளரது கடமையாக இன்னும் தொடர்கின்றது.
மறுபுறத்தில் இச் செயற்பாடுகளுக்காக இதுவரை கிடைத்த நிதியை எவ்வகையில் செலவு செய்வது எவ்வகையில் அறிக்கைப்படுத்துவது தொடர்பான எந்தவொரு நியமமோ நிபந்தனைகளோ கட்சியிடம் இல்லை.
இது மன்னர் காலத்து மன்னரதும் மந்திரியினதும் முடிவே ஆகும். இறுதியில் ஐந்து தானத்திற்கு உட்பட்ட நிலுலையை இன்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கணக்கறிக்கைகளாக சமர்ப்பித்து வருகின்றது 72வருட பாரம்பரிய வரலாற்றை தனக்காக கொண்ட தேசிய தமிழ் கட்சி.
செயலாளருக்கான முதன்மைத் தெரிவுகளாக முன்னின்ற குகதாசன், சிறீநேசன் இருவரும் நேரடியாக நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தோற்ற வேட்பாளர்கள்.
குறிப்பாக இச் சந்தர்ப்பத்தில் கடந்தகால சம்பவம் ஒன்றினை நினைவுபடுத்திக்கொண்டு செல்லது பொருத்தமாக இருக்கும், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் பதவியை விட்டு நீங்க வேண்டும் என்ற சுமந்திரனது பகிரங்க கோரிக்கை சம்பந்தர் பால் இருந்த தேகாரோக்கிய அனுதாபத்தில் இல்லை, அவ்வாறு இருப்பின் அதனை நேரடியாக சம்பந்தரிடமே சொல்லியிருக்கலாம்.
மாறாக அடுத்த நிலையில் இருக்கும் குகதாசன் பால் இருந்த கரிசனை தான் என்பதை இந்த செயலாளர் முன்மொழிவு மீண்டும் ஒருமுறை இறுதிசெய்துவிட்டது.
இவர்கள் இருவருக்கும் தங்களை வெல்லவைக்கவேண்டிய செயற்பாடுகளுக்காக கட்சிக்குள் காத்திரமான பதவிகள் வேண்டும் என்ற கள யதார்த்தம் மாத்திரமே நம்புகின்றார்கள்.
பின்னர் இவை சமரசம் செய்யப்பட்டு புதிய தலைவரது அறிவித்தலில் தேசிய மாநாட்டிற்கான திகதிகள் வெளிவந்த பின்னர் கட்சியின் இரு அங்கத்தவர்கள் வழக்குகளை தாக்கல் செய்கின்றார்கள். தடையுத்தரவை பெற்றுக்கொள்கின்றார்கள்.
குகதாசனது தெரிவை முன்னகர்த்துவதில் சுமந்திரனால் அன்று நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்திற்கு மேலதிகமாக குகதாசனுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நேரடியாக காத்திரமாக வெளிப்படையாக எதனையும் செய்ய முடியவில்லை.
இணக்கப்பாட்டினை நோக்கிய நகர்வு
திட்டம் 02 உடன் சுமந்திரன் முன்னேறியிருக்கலாம், அது குகதாசனுக்கு தெரிந்தும் இருக்கவில்லை, நம்பிக்கையையும் வளர்க்கவில்லை. காரணம் நேரடிப் போட்டியாளராக இருந்த சிறீநேசனை சுமந்திரனால் அணுக முடியவில்லை.
சாணக்கியனுக்கும் சிறீநேசனுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி காரணமாகவும், சுமந்திரன் கடந்த காலங்களில் சிறீநேசனை சிறந்த உறவுமுறைக்குள் பேணாத காரணத்தினாலும் இதனைச் செய்ய முடியவில்லை.
இச்சந்தர்ப்பத்தில் கட்சித் தலைவராக செயற்பட்ட சிறீதரன் இருவரையும் ஒரு இணக்கப்பாட்டினை நோக்கி நகர்த்தியிருந்தார். இச்சூழலில் குகதாசன் தங்களது கையை மீறி சிறீதரன் பக்கம் சாய்ந்து விட்டாரா? என்பதே இங்கே சுமந்திரன் தரப்பிற்கு இருந்த அழுத்தமாயிற்று.
இவ்வாறான சூழ்நிலையிலேயே தமிழரசுக் கட்சியின் உட்கட்சி ஜனநாயக் காலவர்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதிகளாக கட்சியின் கட்டமைப்பு ரீதியாக பெயர்கள்குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சி சார்பாக சுமந்திரனும் முன்னிலையாவதாக அறிவித்திருக்கின்றார். வாதியின் தரப்பில் யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி குருபரன் முன்னிலையாகியிருக்கின்றார். இரண்டு சட்டவாதிகளினதும் நேரடியாக முன்னிலையாகிய வழக்கு வெற்றி விகிதாசாரத்தில் குருபரனே முன்னிலை வகிக்கின்றார்.
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு சட்ட நிபுணத்துவ புலமையாளனாக தேசியப்பட்டியல் ஊடாக அரசியலில் நுழைக்கப்பட்ட சுமந்திரன் தமிழ் மக்களது தேசிய பிரச்சினையை கையாளுவதில் தவறு விட்டிருந்தாலும், குறைந்தபட்சம் தான் சார்ந்த தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களில் அச்சுறுத்தல் விடுத்திருக்கும் உட்கட்சி ஜனநாயகக் காவலர்களிடம் இருந்து கட்சியைக் காப்பாற்றுவாரா? குறைந்த பட்சம் அதற்கான புலமையேனும் அவரிடம் இருக்கின்றதா? என்பதை எதிர்வரும் நீதிமன்ற நாட்கள்தான் முடிவுசெய்யப்போகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 21 February, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.